திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியில் காவல் நிலையங்களுக்கு விசாரணைக்கு அழைத்து வரப்படும் கைதிகளின் பற்களை உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர்சிங் கொடூரமாக பிடுங்குவதாகப் புகார் எழுந்தது. இந்தப் புகாரில் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் விசாரணை மேற்கொண்டு வருகிறார். கூடுதல் காவல் கண்காணிப்பாளரால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சார் ஆட்சியர் சம்மன் அனுப்பி அவர்களை, நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி ஏற்கனவே லட்சுமி சங்கர், சூர்யா மற்றும் சுபாஷ் ஆகிய மூன்று பேரிடம் விசாரணை நடத்தி முடித்துள்ளார். இதில் சுபாஷ் தவிர மீதமுள்ள இரண்டு பேரும் காவல் துறையினரால் தங்கள் பற்களை உடைக்கவில்லை என விசாரணையில் தெரிவித்தனர். இதனால், இந்தச் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டது. மேலும், பாதிக்கப்பட்டவர்களை காவல் துறையினர் மிரட்டுவதாகவும் அதனாலயே விசாரணையில் பற்களை காவல் துறையினர் பிடுங்கவில்லை எனத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேசமயம் ஏஎஸ்பியால் பாதிக்கப்பட்ட இசக்கிமுத்து, மாரி, செல்லப்பா, சுபாஷ், ரூபன், மற்றொரு மாரி ஆகிய ஆறு பேரும் ஏஎஸ்பி தான் தங்கள் பற்களை பிடுங்கியதாக உறுதியாகத் தெரிவித்து வருகின்றனர். மேலும், இவர்கள் ஆறு பேரும் நேதாஜி சுபாஷ் சேனை என்ற அமைப்பின் உதவியோடு நேற்று (மார்ச் 29) மாலை உதவி ஆட்சியர் அலுவலகத்துக்கு விசாரணைக்கு வந்தனர். இந்த அமைப்பு தான் முதல் முதலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் அணுகி, அவர்கள் மூலம் இந்த விவகாரத்தை வெளிக்கொண்டு வந்தது.
அதே சமயம் நேற்று (மார்ச் 29) விசாரணைக்கு வந்தபோது மேற்கண்ட ஆறு பேரில் சுபாஷ் என்பவருக்கு மட்டுமே சார் ஆட்சியர் சம்மன் அனுப்பியிருந்தார். அதனால், அவரை மட்டுமே விசாரணைக்கு அழைத்தார். மீதம் உள்ள ஐந்து பேரும் விசாரிக்காமல் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால், அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த சுபாஷ் சேனை அமைப்பின் தலைவர் மகாராஜன், சார் ஆட்சியர் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும்; ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது குற்ற வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மேலும், தங்களுக்கு ஆதரவாகப் பேசும் நபர்களுக்கு மட்டுமே சார் ஆட்சியர் சம்மன் அனுப்பி இருப்பதாகவும், ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தார். அதேபோல், முறையாக விசாரணைக்கு ஆஜரான சுபாஷ் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''ஏஎஸ்பி தனது பற்களை பிடுங்கி விட்டு மறுநாள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்ததாகவும், இந்த விவாகரத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று எழுதி வாங்கிக்கொண்டு முப்பதாயிரம் ரூபாய் பணம் கொடுத்ததாகவும்'' பகீர் குற்றச்சாட்டை தெரிவித்தார்.
இதன் மூலம் இந்த விவகாரத்தில் தொடர் குழப்பம் நீடித்து வருகிறது. ஒரு பக்கம் ஏஎஸ்பி குற்றம் நடந்ததை அவர் ஒப்புக்கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு அவர் மீது பணியிடை நீக்கும் நடவடிக்கை எடுத்துள்ளது. அதே சமயம், மறுபக்கம் நெல்லையில் உள்ள காவல் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஏஎஸ்பி-ஐ காப்பாற்றும் நோக்கோடு பாதிக்கப்பட்ட நபர்களை மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் இன்று சார் ஆட்சியர் பாதிக்கப்பட்ட செல்லப்பாவின் வீட்டிற்குச்சென்று அவரிடம் சம்மன் வழங்க முயன்றார்.
ஆனால், செல்லப்பா தங்கள் மீது நம்பிக்கையில்லை என்று கூறிவிட்டு, சார் ஆட்சியர் கொடுத்த சம்மனை வாங்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, பாதிக்கப்பட்டதாக கூறப்படும் வெங்கடேஷ் என்ற நபர், சார் ஆட்சியர் முன்பு விசாரணைக்கு ஆஜரானார். சுமார் 40 நிமிடங்கள் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப் பிறகு வெளியே வந்த வெங்கடேஷிடம் செய்தியாளர்கள் விசாரணை நிலை குறித்து கேள்வி எழுப்பினர்.
அப்போது, அவர் பதில் எதுவும் கூற மறுத்துவிட்டார். இந்த விவகாரத்தில் இதுவரை நான்கு பேர், சார் ஆட்சியரிடம் ஆஜராகி உள்ளனர். அதில், மூன்று பேர் ஏஎஸ்பிக்கு ஆதரவாக விளக்கமளித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக சூர்யா என்பவர் ஏஎஸ்பி தனது பல்லை பிடுங்கவில்லை; கீழே விழுந்து தான் பல் உடைந்துவிட்டதாக வெளிப்படையாக தெரிவித்து இருந்தார்.
அதேபோல், நான்கு பேரில் சுபாஷ் என்ற நபர் மட்டும் ஏஎஸ்பி தனது பல்லை பிடுங்கியதாக வெளிப்படையாக குற்றம் சாட்டியுள்ளார். இதற்கிடையில் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாரி, ரூபன், இசக்கிமுத்து மற்றுமொரு மாரி ஆகிய நான்கு பேருக்கு இதுவரை சார் ஆட்சியர் சம்மன் அனுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஏஎஸ்பி பல்வீர் சிங் விவகாரத்தில் திடீர் திருப்பம்.. நெல்லையில் நடப்பது என்ன?