திருநெல்வேலி மாவட்டம் பணக்குடி அருகே உள்ள சண்முக புரத்தை சேர்ந்தவர் பெணட் மேரி. இவருக்கும் களக்காடு சேர்ந்த சாலிட்ராஜா என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 9 வயதில் ஒரு பெண் குழந்தையும், ஐந்து வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். சாலிட் ராஜா வனப்பகுதிகளில் உள்ள தோட்டங்களில் நெல்லிக்காய் பறிப்பதற்காக சென்றுவிடுவார். மாதம் 20 நாள்கள் அங்கேயே தங்கியிருந்து பின்பு மாதத்திற்கு ஒரு முறை அல்லது இருமுறை மட்டுமே வீட்டிற்கு வரும் வழக்கமுடையவர். இந்த நிலையில் பெணட் மேரி வள்ளியூரில் உள்ள தையல் பயிற்சி பள்ளியில் வேலை புரிந்து வந்தார்.
அப்போது இவருக்கும் நாங்குநேரி அருகே உள்ள காத்து நடப்பை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. கணவர் சாலிட் ராஜா வெளியூரில் வேலை செய்து வருவதால், வெள்ளைச்சாமியுடன் பெணட் மேரி பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளார். அப்போது 5 வயது மகனையும் அழைத்துச் சென்றுள்ளார்.
அதனால் இருவரின் உறவுக்கு சிறுவன் இடையூறாக இருப்பதாக நினைத்து வெள்ளைச்சாமி, பெணட்மேரியின் 5 வயது மகனின் முகம், வயிறு, உடல் பகுதி, தொடை பகுதிகளில் சிகரெட்டால் சூடு வைத்தும், நகத்தை வைத்து பரண்டியும் கொடூரமாக காயங்களை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் சிறுவனின் முகம், நெஞ்சு பகுதி, தொடை பகுதியில் தழும்புகளும் விரல், உதடு பகுதியில் காயமும் இருந்துள்ளது.
இது நாளடைவில் சாலிட் ராஜாவிற்கும் அவரது குடும்பத்திற்கும் தெரியவந்தது. சிறுவனின் காயங்கள் குறித்து சாலிட் ராஜா நெல்லை மாவட்ட குழந்தைகள் நல அமைப்பிடம் புகார் அளித்தார். குடும்ப நல அமைப்பினர் பணக்குடி காவல்நிலையத்திற்கு இதுகுறித்து தகவல் கொடுத்து பாதிக்கப்பட்ட சிறுவன் இடமிருந்து வாக்குமூலம் பெற்றனர்.
திருமணத்தை மீறிய உறவுக்காக தனது மகனை தீயினால் துன்புறுத்தும் போது அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த தாயின், ஈவு இரக்கமில்லாத செயலை கண்டு இந்த பகுதி மக்கள் பெரும் வருத்தம் அடைந்தனர். மேலும் கொடூரமாக காயம் ஏற்படுத்திய நபர் மீதும், உடந்தையாக இருந்த தாய் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்களும், குழந்தை நல அமைப்புகளும், பொது மக்களும் அலுவலர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து பணக்குடி காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த எல்இடி வாகன சேவை தொடக்கம்!