திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் (காரையாறு) அணை இன்று (டிசம்பர் 18) அதன் முழு கொள்ளளவான 143 அடியை எட்டியது. பாபநாசம் அதன் சுற்றுவட்டார மலைப் பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கு தற்போது வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. எனவே, பாதுகாப்பு கருதி அணையில் இருந்து சுமார் 3 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறந்து விடப்படுகிறது.
இந்த தண்ணீர் பாபநாசம் தலையணைக்கு வந்து சேர்ந்து தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. இந்த ஆண்டில் முதல் முறையாக அணை நிரம்பியுள்ள நிலையில், 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் மொத்த நீரும் தலையணை பகுதி வழியாக சீறிப்பாய்ந்து தாமிரபரணி ஆற்றில் வந்தடைகிறது. தொடர்ந்து மலைப்பகுதியில் லேசான மழை பெய்து வருவதால், அணையில் கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்பிருப்பதாக பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.