திருநெல்வேலி: தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பிரதான ரயில்வே கேட் பகுதியில் பிப். 16ஆம் தேதி இரவு ரூபா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்னும் பெண் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் இவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். சுமார் 15 நிமிடம் அந்த நபருடன் போராடிய சுபா, கூச்சலிடவே பொதுமக்கள் உதவியுடன் காப்பாற்றப்பட்டார். அதன்பின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ரயில்வே போலீசார், சுபாவிடம் அத்துமீறலில் ஈடுபட்ட கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த ஒருவரை கைது செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட ரயில்வே ஊழியர் ரூபாவும் மற்றும் அவரது கணவரும் இன்று (பிப்.21) செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவரது கணவர் பேசுகையில், "பாலியல் இச்சைக்கு அணுகவிடாமல் அந்த நபரிடம் இருந்து எனது மனைவி 15 நிமிடங்கள் போராடி இருக்கிறார். என் மனைவியின் துணிச்சலான போராட்டத்தால் ஆத்திரம் அடைந்த அந்த நபர், கொலை செய்ய முயன்றுள்ளார். இதையடுத்து கூச்சல் கேட்டுவந்த பொதுமக்கள் அவரை மீட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் எனது மனைவ பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படவில்லை. ஆனால், கேரள ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடகங்களும், என் மனைவி பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியிட்டுள்ளன. இது உண்மைக்கு புறம்பானது. என் மனைவி துணிச்சலுடன் போராடி வெற்றி பெற்றிருக்கிறார்" என்று கூறினார்.
ரயில்வே ஊழியர் ரூபா கூறுகையில், "என்னிடம் அத்துமீறிய அந்த நபர் தமிழில் தான் பேசினான். மேல் சட்டை அணியாமல் காக்கி நிறத்தில் கால் சட்டை மட்டுமே அணிந்திருந்தான். என்னை பாதிக்கப்பட்ட பெண்ணாக ஊடகங்கள் சித்தரிப்பது வேதனை அளிக்கிறது. பெண்களை பொறுத்தவரை அவர்களுக்கு பாதுகாப்பை அவர்களால் மட்டுமே வழங்க முடியும். எதற்கும் அச்சப்படாமல் இறுதி வரை போராட வேண்டும்" என்றார்.