திருநெல்வேலி: பாளையங்கோட்டை பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயின்று வரும் மூன்று மாணவர்கள் தங்களை ஆசிரியர் கிங்ஸிலின் என்பவர் கொடூரமாக தாக்கியதாகவும், அதனால் பலத்த காயங்கள் ஏற்பட்டதாக கூறி ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனையில் இன்று சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து விசாரித்த போது, மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்ததால் ஆசிரியர் கிங்ஸ்லின், அவர்களை அடித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் மாணவர்களை ஆசிரியர் கிங்ஸ்லின் அடிக்கும் சம்பவத்தை வகுப்பறையில் இருந்து மற்றொரு மாணவர் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த விவகாரம் நெல்லை பள்ளி கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் தகவல் அறிந்த நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிறிஸ்துராஜா, பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் மாணவர்கள் பள்ளிக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஆசிரியர் அடிக்கும் சம்பவத்தை வீடியோ எடுப்பதற்காக மாணவர்கள் திட்டமிட்டு செல்போனை கொண்டு சென்றதும் தெரியவந்துள்ளது.
எனவே தடையை மீறி வகுப்பறைக்குள் மாணவர்கள் செல்போன் கொண்டு சென்றது குறித்தும், கல்வி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 90ஸ் கிட்ஸ் காலத்தில் பள்ளியில் ஆசிரியர்கள் அடிப்பது என்பது சர்வ சாதாரணமாக பார்க்கப்பட்டது. 'அடியாது மாடு படியாது' என்ற பழமொழிக்கு ஏற்ப ஆசிரியர்கள் அடிப்பதை அப்போதைய பெற்றோர்கள் வரவேற்றனர். ஆனால் மாறிவரும் காலநிலைக்கு ஏற்ப, சமீப காலமாக மாணவர்களை ஆசிரியர்கள் அடிப்பது பெரும் குற்றமாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், தற்போது பள்ளி மாணவர்களை ஆசிரியர் அடித்தது ஒரு வகையில் அவர்களை திருத்துவதற்காக என்ற கண்ணோட்டத்தில் பார்த்தாலும், மாணவர்களின் கண்ணில் ரத்தம் வரும் அளவுக்கும் கை மற்றும் இடுப்புக்கு கீழ் பகுதியில் பிரம்பின் தடம் பதியும் அளவுக்கு அடித்திருப்பது அவரது பெற்றோர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மாணவர்கள் கூறும்போது, "நாங்கள் தேர்வில் தேர்ச்சிப்பெறாத காரணத்திற்காக ஆசிரியர் கொடூரமாக அடித்தார். மற்றொரு மாணவன் செல்போனில் படம் பிடித்ததால், அவனை தனி அறைக்குள் பூட்டி வைத்து அடித்து கொடுமைப்படுத்தினார்" என்றனர்.
இதனைத் தொடர்ந்து பெற்றவர்கள் கூறும் போது, "எனது குழந்தை தவறு செய்திருந்தால், அதை என்னிடம் தெரிவித்திருந்தால் நான் அவனை கண்டித்து இருப்பேன். ஆனால் வேறு யாரோ செல்போன் கொண்டு வந்த காரணத்திற்காக எனது மகனை கடுமையாக ஆசிரியர் தாக்கியுள்ளார்" என்று தெரிவித்தார்.
இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் ஈடிவி பாரத் சார்பில் தொடர்பு கொண்டபோது, "இது விஷயமாக விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்கு முழுவுக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறோம். தேர்வில் தோல்வியடைந்ததால் அடித்துள்ளார். ஆனால் இந்த அளவுக்கு கொடூரமாக அடிக்க கூடாது. விசாரணைக்குப் பின் முழு விவரம் தெரியவரும்" என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: எறையூர் சிப்காட் தொழில் பூங்காவில் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு!