தமிழ்நாடு சிறுதொழில் கழகம் (டான்சி) என்னும் நிறுவனமானது தமிழ்நாடு அரசின் தொழில், வர்த்தக துறையினால் சிறு தொழில்களை தாமாக நடத்துவதற்காக 1965 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கடந்த 45 வருடங்களுக்கு மேலாக இந்த டான்சி நிறுவனமானது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் முக்கிய பங்களிப்பை ஆற்றி வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே உள்ள டான்சி தொழிற்சாலைகள் உற்பத்தி குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் மூடப்பட்டும் வருகின்றது, பல ஆயிரக்கணக்கான ஒப்பந்த ஊழியர்கள், தொழிலார்கள் வேலை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. இது ஒருபுறமிருக்க, நெல்லை மாவட்டத்தில் செயல்பட்டுவந்த டான்சி நிறுவனம் மதுரைக் கிளையுடன் இணைக்கப்படுவது இங்குள்ள 50க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக அங்கு பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் புகார் அளித்துள்ளனர், மேலும் மதுரைக் கிளையுடன் இணைப்பதினால் தமிழ்நாடுஅரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்கின்றனர்.
இதுமட்டுமின்றி, கடந்த சில வருடங்களகாவே பல முறைகேடுகள் டான்சியில் நடப்பதாகவும், மேலும் அதன் இயக்குனர் விபுநாயர் தொழில் தொடர்பாக தனியார் நிறுவனங்களுக்கே ஆதரவாக செயல்படுகிறார் என்றும் குற்றச்சாட்டினை முன்வைக்கின்றனர். எனவே இதுகுறித்து தமிழ்நாடுஅரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்பதே இவர்களது முக்கிய கோரிக்கையாக உள்ளது.
சில வருடங்களுக்கு முன்பு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வரலாற்றுப் பக்கங்களை மாற்றியமைத்த டான்சி நிறுவனத்தில் மீண்டும் இவ்வாறு ஒரு ஊழல் குற்றச்சாட்டு அதிமுக அரசில் எழுந்துள்ளது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்துவது மட்டுமின்றி பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது.