ஜம்மு பகுதியில் நேற்றிரவு பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற தூப்பாக்கிச் சூட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் சந்திரசேகர் உயிரிழந்தார். பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் வீர மரணமடைந்த சந்திரசேகருக்கு ஜெனி என்ற மனைவியும், ஒன்றரை வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.
சந்திரசேகர் உயிரிழந்த செய்தி கிடைத்ததையடுத்து திருச்சியில் தனது தாய் வீட்டில் மகனுடன் வசித்துவந்த ஜெனி, காவல் துறையின் வாகனம் மூலம் இன்று காலை செங்கோட்டைக்கு பாதுகாப்பாக அழைத்துவரப்பட்டார். சந்திரசேகரின் உடலுக்கு அவரது சொந்த ஊரான மூன்றுவாய்க்கால் பகுதியில் இறுதி அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
பொதுமக்கள், அவரது உறவினர்கள் தகுந்த இடைவெளியைப் பின்பற்றி அஞ்சலி செலுத்த ஏதுவாக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. சந்திரசேகரின் உடல் டெல்லி கொண்டுவரப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வழியாக செங்கோட்டை எடுத்து வரப்படுகிறது. இன்று மாலைக்குள் அவரது உடல் சொந்த ஊர் கொண்டு வரப்படும் என அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த வீரரின் தந்தை செல்லச்சாமி தமிழ்நாடு காவல்துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றியபோது உயிரிழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நெல்லையில் வடமாநிலத்தவர்கள் போராட்டம்!