திருநெல்வேலி: பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் திறந்து வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், "மீன் வள மசோதா 2021இன் ஷரத்துகளை மக்களிடம் எடுத்துரைப்போம். மக்களின் கருத்துகளைக் கேட்ட பின்புதான் மசோதா நிறைவேற்றப்படும். பாரம்பரிய மீனவர்கள் மீன் பிடிப்பதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். தற்போது உள்ள தமிழ்நாடு அரசின் மீன்பிடி சட்டத்தில் அனுமதி இல்லாமல் 12 கடல் மைல் மீன்பிடிக்கும் மீனவர்களின் மீன்கள் பறிமுதல் செய்வதோடு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
உள்நாட்டு மீனவர்களின் நலன் பாதுகாக்கப்படும்
ஆனால் ஒன்றிய அரசின் மீன்பிடி சட்டத்தில் ஆயிரம் ரூபாய்தான் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டு மீனவர்களின் நலன்கள் பாதுகாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மீன்வள மசோதாவை பற்றி பொய் பரப்புரைகள் பரப்பப்படுகின்றன. 12 முதல் 200 மைல் தொலைவிலுள்ள இடத்தில் வெளிநாட்டு மீன்பிடி படகுகள் மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களின் விசைப்படகுகளில் விசைத்தறி அதிகரிக்கப்பட்டு அப்பகுதியில் மீன் பிடிக்க வழிவகை செய்யப்படும். மத்திய அரசு 20 ஆயிரம் கோடி ரூபாய் மீனவர்களின் நலனுக்காக ஒதுக்கியுள்ளது. மீன்பிடி விசைப் படகுகளுக்கு 80 விழுக்காடு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. கடற்பாசி மேம்படுத்துவதற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான சிறப்பு பொருளாதார மண்டலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கட்டுமான நிறுவனம்
ஆழ்கடல் மீன் பிடிப்பதற்கான விசைப் படகுகளின் கட்டுமான நிறுவனம் கொச்சியில் உள்ளதுபோல் தமிழ்நாட்டில் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
மேலும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், "உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும், கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை.
கொஞ்சம் இனிப்பு அதிக கசப்பு
தற்போது உள்ள திமுகவின் 100 நாள் ஆட்சி என்பது கொஞ்சம் இனிப்பு அதிக கசப்பு" என்றார்.
முன்னதாக சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் 250ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டை நீதிமன்றம் அருகே உள்ள அவரது சிலைக்கு ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க: பக்கத்து மாநிலங்களில் பத்திரிகை விளம்பரத்திற்கு பணம் செலவழிக்கும் தமிழ்நாடு அரசு’ - அண்ணாமலை தாக்கு