திருநெல்வேலி: தமிழ்நாட்டில் இளைஞர்கள் மத்தியில் சமீப காலமாக அரசு வேலை மோகம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பள்ளி கல்லூரி படிப்பை முடித்த கையோடு பெரும்பாலானோர் ஏதாவது ஒரு பயிற்சி அகாடமியில் சேர்ந்து தங்களின் அரசுவேலை கனவை நனவாக்க போராடி வருவதை பார்க்க முடிகிறது.
சமூகத்தில் மரியாதை, கை நிறைய சம்பளம் ஏராளமான சலுகைகள் என்பதால் அரசு வேலையை எட்டிப் பிடிக்க வேண்டும் என்பது இளைஞர்களின் விடா முயற்சியாக இருக்கிறது, குறிப்பாக டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்படும் தேர்வுக்கு அதிக இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இது போன்ற சூழ்நிலையில் நெல்லையில் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் தேர்வர்களுக்கு நெல்லை மாநகராட்சி பூங்கா அடைக்கலம் கொடுத்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது. அதாவது பாளையங்கோட்டை புதிய பேருந்து நிலையம் எதிரில் மாநகராட்சிக்கு சொந்தமான சரோஜினி பூங்கா அமைந்துள்ளது. இங்கு தினமும் இரவு ஏராளமான பெண்கள் உள்பட போட்டி தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் கையில் புத்தகங்களுடன் வருகின்றனர்.
பின்னர் அனைவரும் பூங்காவில் ஆங்காங்கே அமர்ந்து படிக்கின்றனர், நெல்லை மட்டுமல்லாமல் கோவில்பட்டி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தேர்வர்களும் இந்த பூங்காவை தேர்வை எதிர்கொள்ளும் களமாக பயன்படுத்தி வருகின்றனர். பொதுவாக இதுபோன்ற மாநகராட்சி பூங்காக்கள் இரவு எட்டு மணிக்கு மேல் பூட்டப்படும். ஆனால், தேர்வர்கள் நாள்தோறும் ஆர்வமுடன் வந்து செல்வதால் இந்த பூங்கா மட்டும் இரவு முழுவதும் விடிய விடிய திறந்தே கிடக்கிறது.
மநாகராட்சி தேர்வர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர், இதுகுறித்து தேர்வர்கள் கூறுகையில், வீட்டில் வைத்து படித்தால் பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை யாரிடமும் கேட்க முடியாது. இந்த பூங்காவில் அமர்ந்து படிக்கும்போது ஏதாவது சந்தேகம் என்றால் அருகில் இருப்பவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள முடிகிறது. எங்கள் பயிற்சிக்கு இந்த பூங்கா பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கொடி பிடிக்கும் கையில், ஆயுதம் பிடிக்கவும் தெரியும் - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆவேசம்!