தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அடுத்த செக்காரக்குடி வடக்குத் தெருவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவலர் சோமசுந்தரத்தின் இல்லத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இசக்கிராஜா(19), பாலா (22), பாண்டி(29), தினேஷ்(22) ஆகிய நான்கு இளைஞர்கள் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தச் சூழ்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கக் கோரியும், உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், திருநெல்வேலி மருத்துவமனை முன்பு உடல்களை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதையடுத்து பாளையங்கோட்டை காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்தவர்களின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அறிவித்தார். இந்தத் தகவலை உயிரிழந்தவர்களின் உறவினர்களிடையே தெரிவித்து காவலர்கள் சமாதானப் பேச்சுவார்த்தையை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு: கைதான மூவரைச் சிறையில் அடைக்க உத்தரவு!