தென் தமிழ்நாட்டின் முக்கிய மாவட்டங்களில் ஒன்றாக கருதப்படும் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒருவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இதனால் திருநெல்வேலி மாவட்ட திமுகவினர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அப்பாவுக்கு சபாநாயகர் பொறுப்பு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அப்பாவு அரசியல் வாழ்க்கை:
ராதாபுரம் தொகுதியில் பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பாக அப்பாவு போட்டியிட்டிருக்கிறார். பின்னர் திமுக மீது ஏற்பட்ட ஈர்ப்பால் 2006ஆம் ஆண்டு முதல் திமுகவில் இணைந்து பயணிக்கிறார். தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாகவும், சுயேட்சையாகவும் இரண்டு முறை ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த அப்பாவுக்கு 2006ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுக வாய்ப்பளித்தது. அப்போது போட்டியிட்டு வெற்றி கண்டார்.
2011ஆம் ஆண்டு தேர்தலில் திமுக தனது கூட்டணி கட்சிக்கு ராதாபுரம் தொகுதியை ஒதுக்கியதால் அப்பாவு போட்டியிடவில்லை. மீண்டும் 2016ஆம் ஆண்டு தேர்தலில் அப்பாவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இதில் அப்பாவு தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் இன்பதுரையிடம் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். தபால் வாக்குகளை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முறையற்று நிராகரித்ததாக குற்றச்சாட்டு வைத்த அப்பாவு, அங்கேயே ஒரு போராட்டத்தையும் நடத்தினார். அதன்பிறகு இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், அப்பாவு இந்த தேர்தலில் வெற்றி பெற்று ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினராகியுள்ளார்.
இந்த முறை தன்னை எதிர்த்து போட்டியிட்ட இன்பதுரையை விட 4,492 வாக்குகள் அதிகம் பெற்று அப்பாவு வெற்றியடைந்துள்ளார். விவசாயிகள் பிரச்னை, தாமிரபரணி ஆற்றில் தனியார் நிறுவனங்கள் தண்ணீர் எடுப்பதற்கு எதிராக குரல் கொடுத்தது என பல்வேறு மக்கள் போராட்டங்களில் பங்கேற்றிருக்கிறார் அப்பாவு. அவருக்கு இந்த முறை சபாநாயகர் பொறுப்பு வழங்க அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சட்டப்பேரவையின் அவை முன்னவராக துரைமுருகன் நியமனம்!