திருநெல்வேலி: புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இன்று (நவ. 19) செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “புதிய தமிழகம் கட்சியின் வெள்ளிவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் டிசம்பர் 15ஆம் தேதி உலக இந்துக்கள் விழிப்புணர்வு மற்றும் ஒருங்கிணைப்பு என்ற பெயரில் சிறப்பு மாநாடு நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 35,000-க்கும் மேற்பட்ட இந்து கோயில்களின் சொத்துக்கள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் கோயில் நிலங்கள் பல்வேறு ஆக்கிரமிப்புகளில் உள்ளது அதை மீட்டெடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
நேர்மையானவரை பணியில் அமர்த்த வேண்டும்
ஒரு சில கோயில்கள் மட்டுமே இதுபோன்ற நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. அதேபோல் கோயில் நகைகளை உருக்கி பிஸ்கட்கள் ஆக்கும் திட்டத்தை அறிவித்தார்கள். ஏற்கனவே ஐந்து லட்சம் டன் நகைகள் உருக்கி இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. அதன் உண்மைத்தன்மையை பொதுமக்களுக்கு தெரிவிக்க இரண்டு அல்லது மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும்.
இந்து ஆலயங்களில் நேர்மையானவர்களையும் உண்மையானவர்களையும் மட்டுமே அறங்காவலர் குழுவில் நியமிக்கவேண்டும். அறங்காவலர் நியமனத்தில் முழுக்க முழுக்க வெளிப்படைத்தன்மை வேண்டும். ஆளுங்கட்சியை சேர்ந்த நபர்களை மட்டும் சேர்த்தால் அது மிகப்பெரிய முறைகேட்டுக்கு வழி வகுக்கும்.
தமிழ்நாட்டில் கடந்த 2011 முதல் பத்து ஆண்டுகளாக ஒவ்வொரு பொங்கலுக்கும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு பொருட்களுடன் 100 ரூபாயில் தொடங்கி ஆயிரம் ரூபாயை வரை கொடுக்கப்பட்டுள்ளது.
வேளாண் சட்டங்கள் வாபஸ்
தற்போது கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா காரணமாக பொதுமக்கள் வருமானம் இன்றி தவிக்கின்றனர். எனவே இந்த நேரத்தில் அவர்களுக்கு வெறும் பொருட்கள் மட்டும் கொடுக்காமல் 2500 ரூபாய் முதல் 4000 ரூபாய் வரை பொங்கல் பரிசாக வழங்க வேண்டும்.
டெல்டா மாவட்டங்கள் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகள் மழை வெள்ளத்தால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் மக்களவையில் இயற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை பிரதமர் திரும்பப் பெற்றுள்ளார். இது வரவேற்கத்தக்க விஷயம்.
இதற்காக கடந்த ஓராண்டாக விவசாயிகள் மிகப்பெரியளவில் போராடினார்கள். எந்தச் சட்டங்கள் கொண்டு வந்தாலும் திட்டங்கள் கார்ப்பரேட்டுகள் மற்றும் நான்கைந்து நபர்களுக்கு மட்டும் பலனளிக்கும் சட்டமாகக் கொண்டு வரும் போது, இது போன்ற பின்னடைவுகளை சந்திக்க நேரிடும். எனவே இந்த போக்கை ஒன்றிய அரசு செய்யக்கூடாது” என்றார்.
இந்து என்றால் சமத்துவம் சகோதரத்துவம்
இதையடுத்து ஆரம்பத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்துவந்த நீங்கள் சமீபகாலமாக இந்துத்துவ கொள்கைகளை ஆதரிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பிய போது, “இந்துக்களுக்காக யார் வேண்டுமானாலும் பேசலாம். இந்துக்கள் என்றால் நான் இந்தியர்களாக தான் பார்க்கிறேன். இந்துக்களை இருக்கக்கூடாது என்று ஒடுக்குமுறை நடக்கும்போது அந்த மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டியது எங்கள் முதல் கடமை.
இந்து மதம் என்றாலே பட்டியலின மக்களுக்கு எதிரான மதம் என்ற பிம்பத்தை சுத்தப்படுத்துவதற்காகவே, அவர்களுக்காக குரல் கொடுக்கிறேன். இந்து என்றால் சமாதானம் என்று தவறாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆனால் உண்மையான இந்து என்றால் சமத்துவம் சகோதரத்துவம் தான். அதன் ஆன்மா அதை விளக்குவதற்காக தான் மாநாடு ஏற்பாடு செய்துள்ளோம்” என்றார்.
பாதுகாப்பற்ற நிலையில் இந்துக்கள்
இதனைத் தொடர்ந்து வெள்ள நிவாரணப் பணியில் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் குறித்து கேட்டபோது, நிறைய படங்கள் வருகிறது என்று நக்கலாக பதிலளித்தார்.
அதேபோல் ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை குறித்து கேட்டபோது, “இன்று தமிழ்நாட்டில் இந்தியாவில் யாரை எளிதில் கேலி செய்யலாம், இழிவுப்படுத்தலாம் என்றால் இந்துக்களை தான் என்ற நிலைக்கு சென்று விட்டார்கள். 100 கோடிக்கும் மேற்பட்ட இந்துக்கள் இன்று பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக கருதுகிறேன்.
மேலும் தேவேந்திரகுல வேளாளர் அரசாணை தொடர்பாக நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் நாங்கள் இணைந்துக் கொள்வோம். அதில் போராடுவோம் வெற்றி பெறுவோம்” என்று தெரிவித்தார்.