தூத்துக்குடி டி.சவேரியார்புரத்தைச் சேர்ந்த சேவியர், அருள்மணி, நிக்கோலஸ், பன்னீர், மாடசாமி ஆகிய ஐந்து பேர் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இது சம்பந்தமாக நேற்று காலை கன்னியாகுமரி சென்ற இவர்கள், நெல்லை மாவட்டம் குற்றாலத்துக்கு நேற்று இரவு காரில் வந்து கொண்டிருந்தனர். காரை மாடசாமி ஓட்டி வந்துள்ளார்.
அப்போது அந்த கார் பத்தமடை அருகே சென்று கொண்டிருந்தபோது, பாபநாசத்தில் இருந்து நெல்லை நோக்கி வந்த தனியார் பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த சேவியர், நிக்கோலஸ், பன்னீர், மாடசாமி உள்பட ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்குச் சென்ற பத்தமடை காவல் துறையினர், சேரன்மகாதேவி தீயணைப்புபடையினர் உதவியுடன் விபத்தில் உயிரிழந்த ஐந்து பேரின் உடல்களையும் மீட்டு, உடற்கூறாய்வுக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து பத்தமடை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றாலத்திற்கு குளிக்க சென்ற நிலையில் விபத்து ஏற்பட்டு ஐந்து பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.