நெல்லை: அம்பாசமுத்திரம் காவல் சரக உதவி கண்காணிப்பாளராக இருந்த பல்வீர் சிங் கல்லிடைக்குறிச்சி, வி.கே.புரம், அம்பாசமுத்திரம் ஆகிய காவல் நிலையங்களில் சிறிய குற்றங்களுக்காக விசாரணைக்கு அழைத்து வரப்படும் கைதிகளின் பற்களை கொடூர முறையில் பிடுங்கியநாக புகார் எழுந்தது.
இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது குறித்து விசாரிக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதாவை உயர்மட்ட விசாரணை அதிகாரியாக தமிழ்நாடு அரசு நியமித்தது. இதனைத் தொடர்ந்து அவர் கடந்த வாரம் முதல் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் இன்றும் கூட அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகத்தில் வைத்து விசாரணை அதிகாரி அமுதா தனது இரண்டாம் கட்ட விசாரணையினை நடத்தி வருகிறார். இதில் பாதிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்ட நபர்கள் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்து வருகின்றனர். ஏற்கனவே சார் ஆட்சியர் நடத்திய விசாரணையிலும் பல்வீர் சிங்கால் பாதிக்கப்பட்ட நபர்கள் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
இந்த நிலையில் புகாருக்கு உள்ளான ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தற்போது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி 506/1, 326, 324 (கொலை மிரட்டல் கையால் காயப்படுத்துதல்) ஆகிய பிரிவுகளில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருந்தார். இருப்பினும் கைதிகளின் பல்லை உடைத்த பல்வீர் சிங் கைது செய்யப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட நபர்களின் கோரிக்கையாக இருந்து வந்தது. இது போன்ற சூழ்நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: southern railway: தென் மாவட்ட ரயில்களில் கூட்ட நெரிசல்.. ரயில்வே நிர்வாகத்திற்கு பயணிகள் வைக்கும் கோரிக்கை!