திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. கரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக புத்தகத் திருவிழா நடைபெறவில்லை.
இந்த ஆண்டு 5ஆவது புத்தக கண்காட்சியை பொருநை நெல்லை புத்தகத் திருவிழா என்ற பெயரில் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் இன்று (மார்ச். 17) முதல் வரும் 27ஆம் தேதி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சபாநாயகர் அப்பாவு பங்கேற்பு
புத்தக கண்காட்சியை சபாநாயகர் அப்பாவு, ரிப்பன் வெட்டி இன்று தொடங்கி வைத்தார். பின்னர் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள புத்தகங்களைப் பார்வையிட்ட அவர், கல்லூரி மாணவர்களுக்கான பயிற்சிப் பட்டறையை தொடங்கி வைத்தார்.
இந்த கண்காட்சியில் பல்வேறு துறைகளின்கீழ் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியில் 126 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் குறித்த புத்தகங்கள், தலைவர்களின் வரலாறு, போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் எனப் பல்வேறு வகையான புத்தகங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.
அனைத்து புத்தகங்களுக்கும் 10 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படுகிறது. 11 நாள்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் சுமார் 3 கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் எதிர்பார்த்துள்ளது.
இடம்பெற்ற ஓவியங்கள், கையேடுகள்
சிறப்பு அம்சமாக அரசுப்பள்ளி மாணவர்கள், தங்கள் கைப்பட வரைந்த ஓவியங்கள் மற்றும் கையேடுகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. மேலும் பண்டைய கால தமிழர்களின் வரலாற்றைப் பறைசாற்றும் வகையில் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பழங்காலப் பொருள்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக 3,500 ஆண்டுகளுக்கு முன்பு முன்னோர்கள் பயன்டுத்திய ஈமச்சடங்கு பொருள்கள், முதுமக்கள் தாழிகள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.