நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் மாணவர் மகாராஜன், பிரதமர் நரேந்திர மோடியின் 70ஆவது பிறந்த நாளையொட்டி அவரை பல்வேறு விதமான வடிவங்களில் ஓவியமாக வரைந்துள்ளார். கடந்த நான்கு மாதங்களில் 114 ஓவியங்களை மகாராஜன் வரைந்து முடித்துள்ளார். அவரைப் பாராட்டும் வகையில் நெல்லை மாவட்ட பாஜகவினர் அவர் வரைந்த ஓவியங்களை பிளக்ஸ் பேனரில் ஒட்டி பாளையங்கோட்டை திம்மராஜபுரம் பகுதியில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகம் முன்பு காட்சிக்கு வைத்துள்ளனர்.
இதனைப் பார்த்த பொன்.ராதாகிருஷ்ணன் மாணவர் மகாராஜனை பாராட்டினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாடாளுமன்ற சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு மிகக் கேவலான முறையில் மேலவையின் பிரதிநிதிகள் நடந்துகொண்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. நாடாளுமன்றத்தின் மானத்தை காற்றில் பறக்கவிட்டுள்ளனர்.
தற்போது நாங்கள் அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். நாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணிதான் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கும். கன்னியாகுமரி மக்களைவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக தேர்தல் பணியைத் தொடங்கிவிட்டது. இடைத்தேர்தலில் பாஜக நிச்சயமாக வெற்றி பெறும். திமுக கூட்டணியில் திமுக சார்பில் ஸ்டாலின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுகிறார்.
திமுக கூட்டணியில் முதலமைச்சருக்கு பஞ்சம் இருப்பதால், முன்கூட்டியே முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்கின்றனர். வேறு யார் பெயரையாவது குறிப்பிட்டால் கூட்டணி இன்றே சிதறு தேங்காய் போல் உடைந்துவிடும்" என்றார்.
இதையும் படிங்க: தரவில்லாத அரசு' என மத்திய அரசை கடுமையாக விமர்சித்த கனிமொழி