நெல்லை: மாநகராட்சியில் 491 வாக்குச்சாவடிகளில் நேற்று (பிப்.19) காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி நெல்லை மாவட்டம் முழுவதும் 50.44 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
இந்நிலையில் நெல்லை மாநகராட்சி பேட்டை அரசடி விநாயகர் கோயில் தெருவில் உள்ள 123, 124, 125 ஆகிய வாக்குச்சாவடிகளில் மாலை 5 மணிக்கு மேல் பொது வாக்காளர்களையும் அனுமதிக்க கோரி அங்கிருந்த காவல்துறையினரிடம் அரசியல் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பொது வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும். மாலை 5 மணி முதல் 6 மணி வரை கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிப்பார்கள் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதைச் சுட்டிக்காட்டி மாலை 5 மணிக்கு மேல் பொது வாக்காளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என காவல்துறையினர் திட்டவட்டமாக தெரிவித்தனர். இருப்பினும் அங்கிருந்த அரசியல் கட்சியினர் மற்றும் முகவர்கள் அதுபோன்று உத்தரவு எதுவும் போடவில்லை என காவல் ஆய்வாளர் ஹரிஹரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் ஆணையம் உத்தரவுப் படி மாலை 5 மணிக்கு மேல் நிச்சயமாக பொது வாக்காளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவே இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என காவல்துறையினர் எச்சரித்தனர். இதையடுத்து அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.