திருநெல்வேலி மாவட்டம் அபிஷேகபட்டியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இங்கு டவுன் பகுதியைச் சேர்ந்த பெருமாள் (54) என்பவர் சென்ற 20 ஆண்டுகளாக காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.
நேற்று (செப்.27) வழக்கம்போல் பெருமாள் இரவு பணிக்காக பல்கலைகழகத்தின் நுழைவு வாயில் உள்ள தனக்கு ஒதுக்கப்பட்ட கேட்டில் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளார்.
நீண்ட நேரம் ஆகியும் அந்த கேட்டில் பெருமாள் மின் விளக்குகளை எரிய விடாமல் இருந்துள்ளார். இதனால் பக்கத்து கேட்டில் இருந்த மற்றொரு காவலாளி பெருமாள் அமர்ந்திருந்த கேட்டிற்குச் சென்று பார்த்துள்ளார்.
அப்போது அவர் இருக்கையில் அமர்ந்தபடி பேச்சு மூச்சு இல்லாமல் இருந்துள்ளார். உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்ததில் அவர் உயிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த பேட்டை காவல் துறையினர் பெருமானின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் பெருமாள் இருக்கையில் அமர்ந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார் என்று கூறப்படுகிறது.
இருப்பினும் பெருமாள் மரணத்துக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆவின் மேலாளரை கத்தியால் குத்திய காவலாளி கைது