தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளியைப் பிடிக்க சென்றபோது, நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தில் தனிப்படை காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஸ்ரீவைகுண்டம் அருகே நடைபெற்ற இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய துரைமுத்து என்பவரைத் தேடிவந்தனர். துரைமுத்து முறப்பநாடு அருகே மணக்கரைப் பகுதியில் பதுங்கியிருப்பதாகத் தனிப்படை பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, அவரைப் பிடிப்பதற்குத் தனிப்படையினர் சென்றனர்.
அப்போது தனிப்படை பிரிவு காவல் துறையினருக்கும், துரைமுத்துவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை துரைமுத்து வீசினார். நாட்டு வெடிகுண்டு தனிப்படை காவலர் சுப்பிரமணியனின் தலையில் பட்டதில், அவர் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தில் படுகாயமடைந்த துரைமுத்து, சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
துரைமுத்து சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் மற்றும் குற்றவாளி துரைமுத்து ஆகியோரது உடல் உடற்கூறாய்வுக்காக, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.
இதையும் படிங்க: முறப்பநாடு அருகே பயங்கரம்: நாட்டு வெடிகுண்டு வீசியதில் தனிப்படை காவலர் உயிரிழப்பு!