தூத்துக்குடி மாவட்டம் மணப்பாறை பகுதியில் கடந்த மாதம் 18ஆம் தேதி பிரபல ரவுடி துரைமுத்துவை பிடிக்கச் சென்றபோது காவலர் சுப்பிரமணியன் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்தில் ரவுடி துரைமுத்துவும் வெடிகுண்டு வெடித்து உயிரிழந்தார். இந்த சூழ்நிலையில் காவலரின் இழப்பு காவல் துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், சில காவலர்கள் சமுதாய அடிப்படையில் ரவுடி துரைமுத்துவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை காவலர் ஒருவர், ரவுடி துரைமுத்துவுக்கு ஆதரவாக காணொலி ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்தார். இதனால் அந்தக் காவலரை அதிரடியாக இடைநீக்கம் செய்து மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர் நடவடிக்கை எடுத்தார்.
இவரை தொடர்ந்து நாங்குநேரி காவல் நிலைத்தில் பணிபுரிந்து வரும் காவலர் சுப்பிரமணியன் என்பவர் ரவுடி துரைமுத்துவுடன் எடுத்த புகைப்படத்தை தனது வாட்ஸ்அப் முகப்பு படமாக வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் அறிந்த தென் மண்டல ஐஜி முருகன், காவலர் சுப்பிரமணியனை சிவகங்கை மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.
தன்னுடன் பணியாற்றிய சக காவலர் உயிரிழந்ததை எண்ணி வருத்தப்படாமல், சமுதாய அடிப்படையில் ரவுடிக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் காவலர்களின் செயல் தென் மண்டல காவல்துறைக்கு தற்போது பெரும் கரும்புள்ளியாக அமைந்துள்ளது.