திருநெல்வேலி: நாங்குநேரி அருகே நெல்லை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. அதாவது நெல்லையில் இருந்தும் சென்னை, மதுரை போன்ற பிற மாவட்டங்களில் இருந்தும் நாள்தோறும் நாங்குநேரி வழியாக நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரிக்கு பல அரசுப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் அதில் பெரும்பாலான பேருந்துகள் நாங்குநேரி ஊருக்குள் செல்லாமல் நெடுஞ்சாலை வழியாக நாகர்கோவில் செல்கிறது.
நாங்குநேரியைப் பொறுத்தவரை தனி சட்டமன்றத் தொகுதி என்பது மட்டுமல்லாமல், விவசாயம் நிறைந்த பகுதியாகவும் உள்ளது. இந்நிலையில் பணி நிமித்தமாக பல ஆயிரம் பேர் வெளியூரில் தங்கியுள்ளனர். இவர்கள் விடுமுறைக்குச் சொந்த ஊர் வருவதற்கு அரசுப் பேருந்தையே நம்பியுள்ளனர். அதேபோல் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் நகர் மற்றும் கிராமங்களுக்கு கூலி வேலைக்காக அரசுப் பேருந்தை நம்பியே செல்கின்றனர்.
எனவே பேருந்து ஊருக்குள் செல்லாததால் நாங்குநேரி மக்கள் நாள்தோறும் அல்லல்படுகின்றனர். இதுகுறித்து எம்எல்ஏ, அமைச்சர், சபாநாயகர், ஆட்சியர், முதலமைச்சர் எனப் பல கட்டமாக மனு அளித்தும் தீர்வு கிடைக்கவில்லை. ஊருக்குள் செல்லும்படி அதிகாரிகள் சில நேரம் வலியுறுத்தியும் கூட அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் அலட்சியத்துடன் செயல்படுகின்றனர்.
இந்த நிலையில் சட்டவிரோதமாக அரசுப் பேருந்துகளை தங்கள் இஷ்டத்திற்கு இயக்கி வரும் அரசுப் போக்குவரத்து கழக அதிகாரிகளைக் கண்டித்து நாங்குநேரியில் போராட்டம் நடந்து வருகிறது. நெல்லை நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை ஒட்டியுள்ள தாலுகா தலைநகரமான நாங்குநேரியில் இன்று வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை நாகர்கோவில் வழித்தடத்தில் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் அரசுப் பேருந்து பயணிகளை புறக்கணித்தும் பேருந்து நிலையங்களுக்கு செல்லாமலும் புறவழிச்சாலை வழியாக அரசு அனுமதி இன்றி, இடைநில்லா சேவை என்ற பெயரில் சட்ட விரோதமாக இயக்கி வருதாக மக்கள் கூறுகின்றனர். மேலும் நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலி பேருந்து நிலையங்களில் இடைப்பட்ட ஊர்களில் உள்ள பொதுமக்களை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுக்கின்றனர்.
கூடுதல் கட்டணங்கள் வசூலித்து விட்டு உரிய நிறுத்தங்களில் நிறுத்தாமல் நடுவழியில் இறக்கிவிட்டுச் செல்வதால் அடிக்கடி ஓட்டுநர் மற்றும் பொதுமக்கள் இடையே மோதல்கள் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் வருகின்றன. இதனால் நாங்குநேரி, வள்ளியூர், பணகுடி உள்ளிட்ட சிறு நகரங்கள் மட்டுமின்றி தேசிய நெடுஞ்சாலைகள் இருக்கும் பல்வேறு கிராம மக்களும் அரசுப் பேருந்து சேவை கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நீதிமன்ற உத்தரவுகள், வருவாய்த்துறையினருடன் ஆன சமாதான பேச்சு வார்த்தை முடிவுகள், மாவட்ட ஆட்சியர் உத்தரவு ஆகியன இருந்தும் எதனையும் மதிக்காமல் அரசுப் போக்குவரத்து கழக அதிகாரிகள் தங்கள் இஷ்டத்திற்கு வெவ்வேறு பெயர்களில் அரசுப் பேருந்துகளை கூடுதல் கட்டணங்களுடன் இயக்கி வருகின்றனர்.
இதனை ஒழுங்குபடுத்த வேண்டிய வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களும், காவல் துறையினாலும் கண்டு கொள்வதே இல்லை. இதனைக் கண்டித்தும் அரசு அனுமதியின்றி இயங்கும் இடைநில்லா சேவை போன்ற வழித்தட இயக்கங்களை தடை செய்யவும், சட்டவிரோதமாக முறைகேட்டில் ஈடுபடும் அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நாங்குநேரியில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இந்தியா சார்பில் யோகா போட்டியில் பங்கேற்க தாய்லாந்து பறக்கும் தஞ்சை சிறுவன்!