திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணிபுரிந்துவருபவர் அந்தோணி ஜெகதா. இவர், கரோனா தடுப்பு நடவடிக்கையின்போது பொதுமக்களிடம் அன்பாக நடந்துகொண்டுள்ளார்.
குறிப்பாக, கூடங்குளம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்களின் வீட்டிற்கு, இவர் நேரடியாகச் சென்று முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளார்.
கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மளிகைப் பொருள்கள், அரிசி உள்ளிட்டவற்றையும் வழங்கிவந்தார். வியாபாரிகளை அழைத்துப் பேசி அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்துள்ளார்.
களப்பணியில் மக்களுக்காகத் தீவிரமாகச் செயல்பட்ட காவல் ஆய்வாளர் அந்தோணி ஜெகதாவுக்கு ஆகஸ்ட் 19ஆம் தேதி கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் நாங்குநேரி சித்த மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று (ஆக.25) அந்தோணி ஜெகதா, கரோனாவிலிருந்து மீண்டு வர வேண்டி அப்பகுதி மக்கள் ஒன்றுதிரண்டு அங்குள்ள கோயில்களில் சிறப்பு பூஜை நடத்தி, பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: கரோனாவிலிருந்து மீண்ட காவலர்களுக்கு வரவேற்பு!