நெல்லை மண்டல கலை பண்பாட்டுத்துறை சார்பில் அரசு அருங்காட்சியகத்தில் இன்று (பிப்-2) ஓவிய கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை சென்னை கவின் கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வரும், ஓவியருமான சந்துரு தொடங்கி வைத்தார்.
இதில், திருநெல்வேலி, தென்காசி கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சிற்ப கலைஞர்கள் தங்கள் ஓவியங்களை காட்சிப்படுத்தியிருந்தனர். மேலும், ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஓவியங்களை கண்டு ரசித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய ஓவியர் சந்துரு, "வாழ்க்கையின் படிப்பினையும், பண்பாட்டினையும் பிரதிபலிப்பதே கலை. இங்குள்ள ஓவியங்களைப் பார்க்கையில், ஓவியர்களுக்கு இக்கலை நன்றாகவே கைவந்திருக்கிறது, மகிழ்ச்சியடைகிறேன். இத்திறனை வளர்த்தெடுக்க தொடர்ந்து பயிற்சிப் பட்டறைகளை நடத்த வேண்டும். அதற்குரிய ஏற்பாடுகளை கலை பண்பாட்டுத் துறை முன்னெடுக்க வேண்டும். நெல்லை அரசு அருங்காட்சியகமும் முயற்சி செய்திட வேண்டும்" எனத் தெரிவித்தார்.
கண்காட்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு கலை சார்ந்த பயிற்சி வழங்கப்பட்டது. குறிப்பாக மண்பானை தயாரிப்பது குறித்து விளக்கப்பட்டது.