நெல்லை: நெல்லுக்கு இறைவன் வேலியிட்டு காத்த காரணத்தால் நெல்வேலி என்ற பெயர் உருவானது. நாளடைவில் திரு என்ற மரியாதையுடன் திருநெல்வேலி என்று அழைக்கப்பட்ட வரலாறும் உண்டு. பெயருக்கு ஏற்றார் போலவே விவசாயம் அதிகளவு செய்யப்படும் திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் முறையாக நெல் திருவிழா நடைபெற்றுள்ளது.
மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மேற்கொண்ட நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்ற நெல் திருவிழாவில் இயற்கை வேளாண் விவசாயிகள் பங்கேற்றனர்.
சத்தான அரிசி வகைகள் , பழமை வாய்ந்த ஏர் கலப்பை, தண்ணீர் இறைக்கும் கமலைகள் , பழங்கால நீர்ப்பாசன கருவிகள் என அரங்கம் முழுவதும் பார்க்கும் இடமெல்லாம் விவசாயம் சார்ந்த பொருட்கள் காட்சியளித்தன. குறிப்பாக பனை ஓலைகளைக் கொண்டு அமைக்கப்பட்ட விழா மேடை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
மேடையின் முன்புறம் மரக்காவில் பாரம்பரிய நெல்களும், உளுந்து போன்ற பருப்பு வகைகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. விழாவில் பங்கேற்ற சபாநாயகர் அப்பாவு , மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு உள்பட சிறப்பு அழைப்பாளர்களுக்கு முழுக்க முழுக்க நெல் மணிகளால் செய்யப்பட்ட மாலைகள் அணிவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது. அதே போல் நெல்மணிகளால் தயாரிக்கப்பட்ட பொக்கேவும் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: செயற்கையை மறுத்து இயற்கை வேளாண்மையில் அசத்தும் நன்னிலம் உழவர்