திருநெல்வேலி: இரட்டை நகரம் கொண்ட நெல்லை சந்திப்பு பகுதியில் ஈரடுக்கு மேம்பாலம் அமைந்துள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த பாலம், ஆசியாவின் முதல் ஈரடுக்கு மேம்பாலம் என்ற பெருமையையும் கொண்டதாகும். புகழ் பெற்ற இந்த மேம்பாலம் நெல்லை மாவட்டத்தின் முக்கிய அடையாளமாகத் திகழ்கிறது. எனவே, இந்த மேம்பாலத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதன் பேரில் சில மாதங்களுக்கு முன்பு 2 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் பாலத்தை பராமரிக்க நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து, அதற்கான பணிகளைப் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் தொடங்கி வைத்தார். இந்த நிலையில், நெல்லை மாநகரில் கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் பக்கவாட்டுச் சுவர், ஈரப்பதம் காரணமாக இடிந்து விழுந்துள்ளது.
சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற கொக்கிரக்குளத்தைச் சேர்ந்த வேல்முருகன் (63) படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனிடையே, இது குறித்து நெல்லை சந்திப்பு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாலத்தைப் பராமரிப்பதற்கு நிதி ஒதுக்கியும் அரசு முறையாகப் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாததால் தான் விபத்து நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, பெரும் விபத்து ஏற்படுவதற்குள் ஒதுக்கப்பட்ட நிதியில் அரசு முறையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சாதி பெயரைச் சொல்லி திட்டியதாக நெல்லை மேயர் மீது புகார்.. தொடரும் திமுக உட்கட்சி பூசல்