திருநெல்வேலி மாவட்டத்தின் பிரசித்திபெற்ற அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஆனிப்பெருவிழா விநாயகர் கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டாலும், ஆனிப்பெருவிழா, ஐப்பசி திருக்கல்யாணம் மிகவும் முக்கியமானதாகும். வரும் ஜூலை 6ஆம் தேதி ஆனிப்பெருவிழா கொடியேற்றத்துடன் 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது.
முன்னதாக, நெல்லையப்பர் திருக்கோயிலை சுற்றியுள்ள அனைத்து திருக்கோயில்களிலும் கொடியேற்றம் மற்றும் சிறப்பு அபிஷேக வழிபாடுகள் நடைபெறும். அதன்படி கோயில் நடை அதிகாலை திறக்கப்பட்டு விநாயகர் கொடியேற்றத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர், ஊர்வலமாக கொடிப்பட்டம் எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. விநாயகர் கொடியேற்றத்தைத் தொடர்ந்து 5 நாட்கள் விநாயகர் திருவிழா, மூவர் திருவிழா, சந்திரசேகரர் திருவிழா நடைபெறும்.
இத்திருவிழாவுக்காக அழைப்பிதழ் அச்சடித்தல், பந்தல் அமைத்தல், தேர்களை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் தொடங்கப்பட்டது.