திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் செட்டிகுளத்தைச் சேர்ந்த மாரிராஜ்(27), பாளையங்கோட்டை மார்க்கெட் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்து கொண்டிருந்தார்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் மற்றும் அவரது நண்பர்கள் ரஞ்சித் பீட்டர், ரஞ்சித் பிரபாகரன், லிங்கேஷ் ராஜா ஆகிய நான்கு பேரும் அங்கு சென்று மாரிராஜிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் திடீரென கிருஷ்ணகுமார் தனது பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மாரிராஜை வெட்டியுள்ளார்.
உடனே அங்கிருந்த மாயாண்டி என்பவர் தடுக்க முயன்ற போது அவரையும் கிருஷ்ணகுமார் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் இருவருக்கும் கை மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் ஆத்திரத்தில் தரையில் கிடந்த கல்லை எடுத்து கிருஷ்ணகுமார் மீது எறிந்துள்ளனர்.
இதில் கிருஷ்ணகுமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது, தகவல் அறிந்து அங்கு சென்ற பாளையங்கோட்டை காவல்துறையினர் வெட்டுப்பட்ட மாரிராஜ், மாயாண்டி மற்றும் காயமடைந்த கிருஷ்ணகுமார் ஆகிய மூன்று பேரையும் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
கிருஷ்ணகுமாரின் நண்பர்களான ரஞ்சித் பிரபாகர், ரஞ்சித் பீட்டர் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர், தப்பியோடிய லிங்கேஸ் ராஜாவை தேடி வருகின்றனர். மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது, அதில் அனைவரும் முதலில் அமைதியாக ரவுன்ட் கட்டி மது அருந்தியுள்ளனர். பின்னர் டிப்டாப் உடை அணிந்து வந்த கிருஷ்ணகுமார், மாரிராஜை அழைத்து தகராறு செய்கிறார்.
பின்னர் தான் கொண்டு வந்த பேக்கில் அரிவாளை எடுத்து மாரிராஜை மீது ஓங்கி வெட்டியதும் அவர் அலறி அடித்து கொண்டு பார் ஊழியர்களிடம் தஞ்சம் புகுவது போன்றும் தொடர்ந்து வெறி தாங்க முடியாமல் கிருஷ்ணகுமார் அரிவாளை ஓங்கியபடி கிருஷ்ணகுமாரை நோக்கி வரும்போது அவர் அங்கிருந்து பிளாஸ்டிக் டேபிளை வைத்து தன்னை தற்காத்து கொள்வது போன்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
மேலும் தடுக்க வந்த மாயாண்டியை வெட்டுவதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. வெட்டுப்பட்ட மாரிராஜ், சமீபத்தில் கைதான பிரபல ரவுடி ராக்கெட் ராஜாவின் கூட்டாளியான செட்டிகுளம் ராஜின் ஆதரவாளர் ஆவார். ராஜிக்கும் அதே செட்டிகுளத்ரை சேர்ந்த செல்வராஜ் தரப்புக்கும் முன்பகை இருந்து வரும் நிலையில் செல்வராஜ் தரப்பை சேர்ந்த கிருஷ்ணகுமார் மாரிராஜை வெட்டியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தேசிய நெடுஞ்சாலையில் கார்கள் மோதி கோர விபத்து - 4 பெண்கள் உயிரிழப்பு