நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளரான பல்வீர் சிங், விசாரணைக்கு அழைத்து வரப்படும் கைதிகளின் பற்களை பிடுங்கி காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டதாக புகார்கள் எழுந்தன. இதே போன்று சில கைதிகளின் அந்தரங்க உறுப்புகளில் தாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. கைதிகளை கொடூரமாக சித்திரவதை செய்து தண்டித்ததாகவும் கூறப்பட்டது. இது தொடர்பாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து ஏஎஸ்பி பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் நேற்று (29.03.2023) அறிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் விசாரணை மேற்கொண்டு வருகிறார். கடந்த மூன்று தினங்களாக பாதிக்கப்பட்டவர்கள் சார் ஆட்சியரிடம் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர். பல்வீர் சிங் பத்துக்கும் மேற்பட்ட நபர்களின் பற்களைப் பிடுங்கியதாக, இந்த விவகாரத்தை வெளிக் கொண்டு வந்த நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பின் தலைவர் மகாராஜன் கூறியிருந்தார். ஆனால், சார் ஆட்சியர் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே சம்மன் அனுப்பியதாக கூறப்படுகிறது.
முதலாவதாக லட்சுமி சங்கர் என்பவர் சார் ஆட்சியரிடம் விசாரணைக்காக ஆஜரானார். பின்னர் சூர்யா என்ற இளைஞர் நேற்று(மார்ச்.29) காலை ஆஜரானார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக போலீசார் தனது பற்களை பிடுங்கவில்லை என்றும், தான் கீழே விழுந்ததில்தான் பற்கள் உடைந்துவிட்டது என்றும் கூறினார். இதனால் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. போலீசாரின் மிரட்டல் காரணமாக வாக்குமூலத்தை மாற்றிக் கூறினாரா என்றும் சந்தேகம் எழுந்தது.
அதே சமயம் நேற்று மாலை சுபாஷ் சேனை அமைப்பின் உதவியோடு ஆஜராக வந்த ஆறு பேரில் சுபாஷ் என்ற நபருக்கு மட்டும் சார் ஆட்சியர் சம்மன் அனுப்பியிருந்தார். அதனால் அவர் மட்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். மீதி ஐந்து பேர் திரும்பிச் சென்றனர். சம்மன் அனுப்புவதில் தாமதம் ஏற்படுத்தி, அதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி காவல்துறைக்கு சாதகமாக செயல்பட வைப்பதாக சுபாஷ் சேனை அமைப்பின் தலைவர் மகாராஜன் குற்றச்சாட்டியிருந்தார். இந்த சூழலில் பதிக்கப்பட்ட நபர்கள் இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராக உள்ளனர்.
இந்த நிலையில் சம்மன் இல்லாமலும் பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக வந்து ஆஜராகலாம் என்று சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து நோட்டீஸ் ஒட்டப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் இன்று மேலும் பலர் ஆஜராகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.