தமிழ்நாட்டில் இந்திய முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மூன்றாம் கட்ட தேர்தல் பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளார். அக்கட்சியின் இளம் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மூன்று தொடர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார்.
இந்நிலையில், கடந்த 27, 28 ஆகிய இரு தேதிகளில் நடைபெற்ற ராகுல் காந்தியின் பரப்புரை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கரபாண்டியன் மீது நெல்லை டவுன் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக காவல்துறை வட்டாரங்களில் விசாரித்த போது, தேர்தல் அறிவித்த பிறகு அரசியல் கட்சியினர் எந்தவொரு கூட்டத்தையும் நடத்த வேண்டும், பரப்புரை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள இந்த நேரத்தில் சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர்களிடம் உரிய அனுமதி பெறாமல் நெல்லை டவுனில் ராகுல் காந்தி பரப்புரை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
இதன் காரணமாகவே நாங்குநேரி தனி வட்டாட்சியர் விஜயா அளித்த புகாரின் பேரில் திருநெல்வேலி காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
திருநெல்வேலியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் சூழலில் முதல் வழக்காக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மீது தேர்தல் விதிமீறல் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தேர்தல் பணியாற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஊடகத்தினருக்கு தபால் மூலம் வாக்களிக்க அனுமதி!