தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தைப் பொறுத்தவரை திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் முக்கிய வேட்பாளராக அறியப்படுகிறார்.
ஏன் முக்கிய வேட்பாளர்?
ஏன் என்றால் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 20 இடங்களில் திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதியும் ஒன்று. நயினார் நாகேந்திரன் ஏற்கனவே அதிமுக சார்பில் இதே தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறை வெற்றிபெற்று ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராகப் பதவி வகித்தவர்.
தற்போது அவர் பாஜகவில் இருந்தாலும்கூட மீண்டும் திருநெல்வேலி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக வேண்டும் என்ற முனைப்போடு ஆரம்பத்திலிருந்தே அதிமுக கூட்டணியில் திருநெல்வேலி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்க வேண்டும் என்று தனக்கு வேண்டியவர்களிடம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவந்ததாகக் கூறப்படுகிறது.
விரும்பிய தொகுதி... விரலில் மை!
அவர் விரும்பியபடி திருநெல்வேலி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டு திட்டமிட்டபடியே நயினார் நாகேந்திரன் அங்கு போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், நயினார் நாகேந்திரன் இன்று பாளையங்கோட்டை மகாராஜநகரில் உள்ள ஜெயந்திரா தனியார் பள்ளியில் தனது வாக்கினைச் செலுத்தினார். முன்னதாக அவர் வரிசையில் நின்று தனது வாக்குச்சீட்டு விவரங்களை அலுவலர்களிடம் சரிபார்த்த பின்னர் இடது கை ஆள்காட்டி விரலில் மை வைத்துவிட்டு வாக்களித்தார்.
இதையும் படிங்க: மக்களாட்சிக்காக... கடமையை நிறைவேற்றிய ராஜேந்திர பாலாஜி!