நெல்லை மாவட்டம், நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட மாவடியில், சுமார் 300க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். மண்பாண்டம் செய்வதே இந்த கிராமங்களின் பிரதானத் தொழிலாக உள்ளது. நாங்குநேரி தொகுதிக்கும், இராதாபுரம் தொகுதிக்கும் இடைபட்டப் பகுதியிலுள்ள இக்கிராமத்தில், சில ஆண்டுகளாகவே சாலை, பாலம் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.
இதற்காக பொதுமக்கள் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால், தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாகவும், தங்கள் ஊருக்கு எந்த ஒரு வேட்பாளரும் ஓட்டுக்கேட்டு வரக்கூடாது எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர்.
பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இதனைத் தொடர்ந்து இந்த கிராமத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தங்களின் தேவைகளை அரசு உடனடியாக நிறைவேற்றும்வரை தாங்கள் ஓட்டுப் போடப்போவதில்லை எனக்கூறி, தங்கள் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி வைத்து, அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அமைச்சர்கள் வாக்கு கேட்டு வரும்போது கறுப்புக்கொடி ஏற்றிப் போராட்டம் நடத்தினால், குழந்தைகள் உட்பட அனைவரின் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்வோம் எனக் காவல்துறையினர் மிரட்டுவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:
கேஆர்பி அணை நீர்வரத்து அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!