நெல்லை மாவட்டம் நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரூபி மனோகரன் நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் நடேசனிடம் தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து ரூபி மனோகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாங்குநேரி தொகுதியில் பெரும்பாலான பகுதி விவசாய தொழில் சார்ந்ததாகவே இருக்கிறது. இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகியுள்ளனர். எனவே, விவசாயிகளின் பிரச்னைகளை முன்னிறுத்தி பொது மக்களிடம் வாக்கு சேகரிக்கவிருக்கிறோம்.
அதேபோல், இந்த பகுதியில் உள்ள இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் செயல்படுவேன். 2021ஆம் ஆண்டுக்குள் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சர் ஆவது உறுதி. இதற்கு முன்பு இங்கு சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த வசந்தகுமார் பொது மக்களுக்கு ஏராளமான நலத்திட்டங்களை செய்துள்ளார்.
இளைஞர்களைப் படிக்க வைத்துள்ளார், குளங்களை தூர்வாரியுள்ளார். எனவே இந்த தொகுதியில் உள்ள மக்கள் எங்களுக்கு எதிராக இல்லை. எங்களுக்கு ஆதரவான மன நிலையிலேயே உள்ளனர். எனவே எனது வெற்றி உறுதி செய்யப்பட்ட வெற்றி” என்று தெரிவித்தார். வேட்புமனுதாக்கலின் போது திமுக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: நாங்குநேரியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் : அதிமுக வேட்பாளர்