தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பொதுமக்கள் வெளியில் வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமென தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இருப்பினும் அரசின் நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் பேரூராட்சி அலுவலர்கள் சசிகுமார், மாரியப்பன் மற்றும் காவல்துறையினர் மெயின் பஜாரில் முகக்கவசம் அணியாமல் சென்ற பொதுமக்களுக்கு, தலா 100 ரூபாய் அபராதம் விதித்தும், முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இச்சோதனையில் இன்று (ஜூலை 4) ஒரே நாளில் பணகுடி பகுதியில் 50க்கும் மேற்பட்டவர்களிடம் முகக்கவசம் அணியாததால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நகராட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.