திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. குறிப்பாக, நாளொன்றுக்கு அதிகபட்சம் ஆயிரத்து 100 பேர் வரை தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் நீண்ட நாள்களுக்குப் பிறகு மாவட்டத்தில் நேற்று (மே.31) தொற்று எண்ணிக்கை 138ஆகக் குறைந்தது.
கரோனா மூன்றாம் அலை வரக்கூடும் எனக் கூறப்பட்டு வரும் நிலையில், அதை சமாளிக்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக நெல்லை அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய கூடுதலாக செவிலியர், மருத்துவர்களை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் 60 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் எம்.பி.பி.எஸ் முடித்த மருத்துவர்களை தேர்வு செய்வதற்கான நேர்முகத் தேர்வு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. இந்த நேர்முகத் தேர்வில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆனால், மொத்தம் 75 பேர் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர்.
நெல்லை அரசு மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள், மூத்த பேராசிரியர்கள் நேர்முகத் தேர்வுக்கு வரும் மாணவர்களை தேர்வு செய்து வருகின்றனர். மாணவர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்து, நேர்முகத் தேர்வின் அடிப்படையிலையே 75 மருத்துவர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தேர்வு செய்யப்படும் மருத்துவர்கள் நெல்லை அரசு மருத்துவமனை, பிற அரசு கரோனா சிகிச்சை மையங்களில் பணியமர்த்தப்படவுள்ளனர்.