திருநெல்வேலி: அரபிக்கடலில் உருவான வளிமண்டல சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் அதி கனமழை பெய்தது. இந்த அதி கனமழையால் தாமிரபரணி ஆறு, கோதையாறு, குழித்துறை ஆறு உள்ளிட்ட ஆறுகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த மழை வெள்ளத்தில் திருநெல்வேலி மாவட்டம் வண்ணார்பேட்டை, அரசு போக்குவரத்துக் கழக பணிமனைக்குள் தாமிரபரணி வெள்ளநீர் புகுந்து, பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பணிமனையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், இன்று (டிச.22) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், சேத விவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார்.
இதையும் படிங்க: கழுத்தளவு வெள்ளம்.. 39 மணிநேரம் மரத்தின் மீது அமர்ந்து உயிர் தப்பிய விவசாயி.. ஈடிவி பாரத் உடன் பகிர்ந்த பகீர் நிமிடங்கள்!
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, “திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழக பணிமனைக்குள் வெள்ள நீர் சுமார் 10 அடி உயரத்திற்கு நின்றுள்ளதால், பணிமனைக்குள் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டு உள்ளன. மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுரி, தென்காசி உள்பட 4 மாவட்டங்களில் 10 கோடி ரூபாய் அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக இங்குள்ள நிர்வாக இயக்குநர் தெரிவித்து உள்ளார். இது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நிதி ஒதுக்கப்படும்.
கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதைத் தொடர்ந்து, அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாலைகள் சேதம் அடைந்துள்ளதால், தற்போது 55 சதவீதம் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. சாலைகள் முற்றிலுமாக சரி செய்யப்பட்டவுடன், அங்கு முழு அளவில் பேருந்துகள் இயக்கப்படும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: லீவு உண்டா? இல்லையா?... நெல்லையில் பள்ளி மாணவர்களை குழப்பிய மாவட்ட நிர்வாகம்!