திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள தெற்கு பாப்பான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகரன். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சுதாகரனின் மனைவியும் அவர் வீட்டின் அருகில் வசித்து வந்த வேலு என்பவரும் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்துள்ளனர்.
இதனைக் கண்டித்து சுதாகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முன்னதாக புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் வேலுவை காவல் துறையினரும் கண்டித்துள்ளனர். இதனையடுத்து வேலு, சுதாகரனின் மனைவியுடனான தனது தொடர்பைத் துண்டித்தார். பின்னர் சுதாகரனும் அவரது மனைவியும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், மீண்டும் சுதாகருக்கும் அவரது மனைவிக்கும் பிரச்சனைகள் வரத்தொடங்கியதையடுத்து இருவரும் பிரிந்தனர்.
இந்த நேரத்தில் சுதாகரின் மனைவியும் வேலுவும் மும்பை சென்று தலைமறைவாக வாழத் தொடங்கியுள்ளனர். ஐந்தாண்டுகளுக்குப் பின் சமீபத்தில் தனது சொந்த ஊருக்கு வந்த வேலு, அயன் சிங்கம்பட்டியில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில், வேலு ஊருக்கு வந்தை அறிந்த சுதாகரன் உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட கும்பல், அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே வேலு உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த கல்லிடைக்குறிச்சி காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று வேலுவின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் குற்றவாளிகளைத் தேடி வந்த நிலையில், சுதாகரன், அவரது சகோதரர் சுடலை முத்து, இசக்கிமுத்து ஆகிய மூன்று பேர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர்.