கரோனா ஊரடங்கு காரணமாக பல மாதங்களாக அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. தற்போது ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், ஒரு சில ரயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன.
வரும் 4-ஆம் தேதி முதல் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அங்கிருந்து திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் மூன்றாவது நடைமேடைக்கு ரயில்பெட்டிகள் சுத்தம் செய்யும் பணிக்காக கொண்டு வரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ரயில் பெட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது ஒரு பெட்டியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதனைப் பார்த்த ஊழியர்கள் ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல் துறையினர், சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: புத்தாண்டு கொண்டாட்டம்: ஒருவருக்கு அரிவாள் வெட்டு