திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை அடுத்துள்ள மறுகால் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் நம்பிராஜன் (23). இவரும், அதே தெருவில் வசித்து வரும் வான்மதி என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் கடந்த மாதம் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி கோயிலில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் பெண் வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்துகொண்டதால், ஏதேனும் தகராறு ஏற்படலாம் என்று எண்ணி நெல்லை டவுனில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளனர். வான்மதிக்கு 17 வயது தான் ஆகிறது என்பதால் வான்மதியின் சகோதரர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்றிரவு நண்பர்கள் அழைப்பதாகக் கூறி வெளியே சென்ற நம்பிராஜன் அருகில் இருந்த குறுக்குத் துறை ரயில்வே கேட் பகுதியில் தலை துண்டித்த நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெல்லை ரயில்வே காவல் துறையினர் நம்பிராஜனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நம்பிராஜன் உயிரிழப்பு தொடர்பாக நெல்லை டவுன் காவல் நிலையத்தில் 302, 365 ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் நம்பிராஜன் சமீபத்தில் காதல் திருமணம் செய்துள்ளதால் பெண் வீட்டாரால் இச்சம்பவம் நடந்திருக்க வாய்ப்புள்ளதாக எண்ணி பெண் வீட்டாரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது தான் அந்த திடுக்கிடும் தகவல் வெளிவந்தது, தங்களது எதிர்ப்பை மீறி தங்கையை காதல் திருமணம் செய்துகொண்ட ஆத்திரத்தில் நம்பிராஜனை தீர்த்துக்கட்டுவதற்காக வான்மதியின் சகோதரர்கள் திட்டம் தீட்டியுள்ளனர்.
காதல் திருமணத்தை பெண் வீட்டார் ஏற்றுக்கொண்டதாகவும் பெண்ணின் சகோதரர்களும் உறவினர்களும் சமாதானம் பேசுவதற்கு வந்துள்ளதாகவும் கூறிய நண்பர்களின் வார்த்தையை நம்பிய நம்பிராஜன் இரவில் தனியாக அங்கு சென்றுள்ளார்.
அவரிடம் பேசிய பெண்ணின் சகோதரர்கள் எதிர்பாராத நேரம் பார்த்து நம்பிராஜனை தாக்கி அவரது தலையை துண்டாக வெட்டி குறுக்குத் துறை ரயில்வே கேட் பகுதியில் போட்டுவிட்டு சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய பெண்ணின் சகோதரர்கள் தலைமறைவாகியுள்ளதால் அவர்களை தேடும் பணியில் காவல் துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சாதி மறுப்புத் திருமணம் செய்ததால் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த கிராமம்: ஊருக்குள் அனுமதிக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பெண் மனு!