திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் மாநிலத் தேர்தல் ஆணையரும் தமிழ்நாடு வார்டு மறுவரையறை ஆணையருமான பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாநிலத் தேர்தல் ஆணைய செயலாளர் சுப்பிரமணியன், நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் வார்டு வரையறை குறித்து தங்கள் கருத்துகளைத் தெரிவித்ததோடு மாநில தேர்தல் ஆணையரிடம் வார்டு, வாக்குசாவடிகள் குறித்து எழுத்துப்பூர்வ மனு அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து, கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு தேர்தல் ஆணையர் பழனிச்சாமி, "வார்டு மறுவரையறை கூட்டத்தில் பல்வேறு கருத்துகள் குறித்து பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
பொதுமக்கள் அளிக்கக்கூடிய மனு குறித்து பரிசீலனை செய்ய சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்படும் அலுவலர்கள் குழு ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல்செய்யும்.
மேலும், மனு மீது இரண்டு நாள்களில் பரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் பரிசீலனைக்கு வரும்போது மனு அளித்தவர்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் இருக்க வேண்டும்.
வாக்குச்சாவடிகள் தொலை தூரங்களில் இருப்பதால் மிகவும் சிரமப்படுவதாகப் பொதுமக்கள் பலர் மனு அளித்துள்ளதால், வார்டு மறுவரையறை செய்த பின்னர் வாக்குச்சாவடிகள் தொலைவு குறித்தும் தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.
மேலும், வார்டு மறுவரையறைப் பணிகளை விரைந்து முடித்து உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: ஆட்சியர் அலுவலகத்தில் 'கொரோனா வைரஸ்' விழிப்புணர்வு கூட்டம்