திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் காரையாறு அணையை சுற்றி இஞ்சிகுழி, சேர்வலாறு, அகஸ்தியர் காலனி, பெரிய மைலார், சின்ன மைலார் ஆகிய இடங்களில் காணி பழங்குடி மக்கள் பூர்வகுடிகளாக 100 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கின்றனர்.
இதில் இஞ்சிக்குழியில் வசிக்கும் காணி மக்களின் அன்றாட வாழ்க்கை அவ்வளவு எளிதில் கடந்து செல்வதில்லை. பிற காணி நிலங்கள் எல்லாம் ஆள் நடமாட்டம் மற்றும் வனத்துறை தொடர்பு வசதிகள் நிறைந்த உள்ளன. ஆனால் இஞ்சிக்குழி என்பது காரையார் அணையை தாண்டி சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் நடுக்காட்டுக்குள் அமைந்துள்ளது.
காணி மக்களின் தொழில்: இங்கே காணி மக்களைத் தவிர வேறு ஆள் நடமாட்டமும், எந்தவித தொலைத்தொடர்பும் இல்லாமல் நூறு ஆண்டுகளுக்கு மேல் இக்காணி மக்கள் வசித்து வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி இஞ்சிக்குழியில் ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 24 நபர்கள் மட்டுமே வசிக்கின்றனர். இவர்களின் பிரதான தொழில் விவசாயம்தான்.
வாழை, மிளகு, கிழங்கு உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு தங்கள் தேவையை பூர்த்தி செய்துகொள்கின்றனர். துளியும் ஆடம்பரத்தை விரும்பாத காணி பழங்குடி மக்கள் காலத்தின் கட்டாயத்தாலும் வரும் தலைமுறைகளின் நலனுக்காகவும் தங்கள் குழந்தைகளையாவது படிக்க வைத்து வெளி உலகத்தில் சாதிக்க வைக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர்.
பள்ளிக் கூட கனவு: ஆனால் இஞ்சிக் குழியிலிருந்து காரையாறு அணையைக் கடந்து கீழே இறங்கி பள்ளிக்கூடம் சென்று வருவது என்பது அவ்வளவு எளிதல்ல. அங்கிருந்து அடர்ந்த காடுகளைத் தாண்டி வனவிலங்குகளின் ஆபத்தையும் மீறி 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து காரையார் அணையை அவர்கள் அடையவேண்டும்.
இந்த 10 கிலோ மீட்டர் தூரத்தை விட காரையார் அணையை கடப்பது என்பது தான் இம்மக்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக உள்ளது. இருப்பினும் ரேஷன் பொருள் வாங்குவதற்காக இஞ்சுக்குழி காணி மக்கள் மாதத்தில் இரண்டு நாள்கள் மிகச் சிரமப்பட்டு கீழே வந்து செல்கின்றனர். இதற்காக அவர்கள் சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம் கொண்ட காரையாறு அணையை கடப்பதற்கு வனத்துறை சார்பில் படகு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
படகு இருக்கு டீசல் இல்லை: ஆனால் படகில் பயணம் செய்ய வனத்துறை காணி மக்களிடம் 2 லிட்டர் டீசல் வாங்கி தர வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாக தெரிகிறது. அதேசமயம் விவசாயத்தை தவிர வேறு வருமானம் இல்லாததால் டீசல் வாங்கி கொடுக்க முடியாத சூழலில் அவர்கள் உள்ளனர். அணையை சுற்றி கீழே வர வேண்டும் என்றால் கூடுதலாக 10 கிலோ மீட்டர் அவர்கள் நடக்க வேண்டும்.
எனவே சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தை கொண்டு டீசல் வாங்கி கொடுத்தாலும் கூட அவர்கள் நினைத்த நேரத்தில் வனத்துறையினர் படகில் ஏற்றி செல்வதில்லை. திடீரென அதிகாரிகள் யாராவது வந்தால் காணி மக்களை அம்போவென்று விட்டுவிட்டு அதிகாரிகளை படகில் ஏற்றிச் செல்வதாக தெரிவிக்கின்றனர்.
ஆபத்தான மூங்கில் படகு பயணம்: எனவே வனத்துறையை நம்பி பலன் அளிக்காததால் தற்போது காணி மக்கள் தன் கையே தனக்கு உதவி என்ற அடிப்படையில் சுயமாக மூங்கில் கம்புகளை கொண்டு சங்கடம் கட்டி பெண்கள் குழந்தைகள் மற்றும் மூட்டை முடிச்சுகளுடன் மிக ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர்.
முதலைகள் மிகுந்த இந்த அணையில் படகில் செல்வது என்பதே மிக மிக ஆபத்து தான். ஆனால் எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் காணி மக்கள் தற்போது மூங்கில் கம்புகளால் ஆன சங்கடத்தில் தங்கள் உயிரை பணையம் வைத்து கடந்து செல்கின்றனர். மேலும் ரேஷன் பொருள் வாங்க வேண்டுமென்றால் அவர்கள் மாதம் ஆறு நாள்கள் செலவு செய்தாக வேண்டும்.
ரேஷன் கிடைக்குமா?: மாதந்தோறும் இரண்டு சனிக்கிழமைகளில் இவர்களுக்கு காரையார் அணை அருகே உள்ள கடையில் வைத்து ரேஷன் பொருள் வழங்கப்படும். இதற்காக அவர்கள் வெள்ளிக்கிழமை தங்கள் பயணத்தை தொடங்க வேண்டும் அன்று காலை நடக்க ஆரம்பித்தால் மாலை 3 மணியளவில் அணையை வந்து சேர்வார்கள்.
பின்னர் அங்கிருந்து தாங்கள் கட்டி வைத்துள்ள மூங்கில் சங்கடத்தை எடுத்துக்கொண்டு மிக மிக ஆபத்துடன் சுமார் 2 மணிநேரம் அணையைக் கடந்து கீழே உள்ள சின்ன மைலாருக்கு வந்து சேர்வார்கள். பின்னர் அங்குள்ள தங்கள் உறவினர்கள் இல்லத்தில் இரவு தங்கிவிட்டு மறுநாள் ரேஷன் பொருள் மற்றும் தங்களுக்கு தேவையான பிற பொருள்களை வாங்கிக்கொண்டு மீண்டும் அன்று இரவு மைலாரில் தங்கிவிட்டு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை தங்கள் இல்லத்தை நோக்கி பயணத்தை தொடங்குவார்கள்.
6 நாள்கள் திகில்: அன்றிரவு தான் அவர்கள் வீட்டிற்கு செல்ல முடியும். டிஜிட்டல் இந்தியாவில் வசிக்கிறோம் என்று நாம் மார்தட்டிக் கொண்டாலும் இதே காலத்தில்தான் வயிற்றுப் பசியைப் போக்கிக் கொள்ள பழங்குடி மக்கள் தங்கள் உயிரை பணையம் வைத்து மாதத்தில் ஆறு நாள்கள் காட்டில் திகில் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.
காட்டுக்குள் நவீனத்தை புகுத்த முடியாது என்றாலும் கூட குறைந்தபட்சம் அவர்கள் கீழே வந்து செல்லவாவது அரசு உரிய ஏற்பாடு செய்து கொடுக்கலாம். இதுகுறித்து இஞ்சிக்குழியை சேர்ந்த அய்யப்பன் என்பவரது மகள் அபிநயா கூறுகையில், நாங்கள் ரேஷன் பொருள் வாங்குவதற்காக மாதத்தில் இரண்டு நாள்கள் கீழே வருவோம்.
கோரிக்கை: எங்களிடம் படகில் செல்ல இரண்டு லிட்டர் டீசல் கேட்பார்கள். ஆனால் எங்களிடம் போதிய வருமானம் இல்லாததால் நாங்களே சங்கடம் கட்டி ஆபத்துடன் அணையை கிடக்கிறோம். எங்கள் பகுதியில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லை.
எனவே மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு இலவசமாக படகில் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அபிநயா தனது சிறு வயது முதலே தாய் தந்தையை பிரிந்து ஊருக்குள் விடுதியில் தங்கியபடி பிளஸ்2 வரை படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : காணி நிலம் கூட இல்லாத காணி பழங்குடி: நடவடிக்கை எடுக்கும் நெல்லை கலெக்டர்!