திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த இரண்டு வார காலமாக கரோனா வைரஸ் தொற்று மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. நாள்தோறும் சராசரியாக 20 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். அந்த வகையில், நேற்று (ஜூன் 22) நிலவரப்படி மாவட்டத்தில் மொத்தமாக 644 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தாலும் கூட, பொதுமக்களின் ஒத்துழைப்பு சரிவர இல்லாததால் வைரசைக் கட்டுப்படுத்துவதில் அலுவலர்களுக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கையைப் பொறுத்து கூடுதல் கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர்கள் விதிக்கின்றனர்.
ஆனால், திருநெல்வேலி மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்த போதிலும், இதுவரை கூடுதல் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை. இருப்பினும், சில வியாபாரிகள் தாங்களாக முன்வந்து சில கட்டுப்பாடுகளை கொண்டுவருகின்றனர்.
அந்த வகையில், தற்போது திருநெல்வேலி மாநகர் பகுதிகளில் உள்ள சலூன் கடை உரிமையாளர்கள் தங்களது வேலை நேரத்தைக் குறைக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி, இன்று (ஜூன் 23) முதல் மாநகர் பகுதியில் உள்ள சுமார் 100 சலூன் கடைகள் காலை ஆறு மணி முதல் பிற்பகல் இரண்டு மணி வரை மட்டுமே செயல்படும் என்று அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க...காவிரி இருந்தும் விவசாயம் செய்ய வழியில்லை - முடிக்கப்படாத மறுசீரமைப்புப் பணி