திருநெல்வேலி: கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் இன்று (செப்.12) மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. பல மாவட்டங்களில் மக்கள் இதற்கு ஆதரவு தெரிவித்து தடுப்பூசிகளை ஆர்வமுடன் செலுத்திச் செல்கின்றனர்.
அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம், சமாதானபுரத்தில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ”தமிழ்நாட்டில் இதுவரை மூன்று கோடியே 74 லட்சத்து எட்டாயிரத்து 989 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் நான்கு கோடி என்ற நிலை எட்டப்படும்.
தமிழ்நாடு தனிச் சிறப்பு
உருமாறி வரும் வைரஸைக் கண்டறிவதற்கான ஆய்வகம் இந்தியாவில் 23 இடங்களில் உள்ளன. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆய்வகங்களில் ஆய்வு செய்வதற்கு ஒரு மாத கால அவகாசம் ஆகிறது. எந்த மாநிலமும் தனியாக ஆய்வகம் பெற்றிருக்கவில்லை. தமிழ்நாட்டில் முதல்முறையாக நாளை மறுநாள் (செப்.14) மரபியல் அணு ஆய்வகம் தொடங்கப்பட உள்ளது.
நான்கு கோடி ரூபாய் செலவில் டிஎம்எஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆய்வகத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து பெங்களூரில் உள்ள ஆய்வகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இதனால் பொருள் செலவும், கால தாமதமும் ஆகி வந்ததால் உடனடியாக இந்த ஆய்வகம் தமிழ்நாட்டில் தொடங்கப்படடுள்ளது. இதற்காக ஐந்து தொழில்நுட்ப ஆய்வாளர்கள் பெங்களூர் சென்று பயிற்சி பெற்று வந்துள்ளனர்.
நீட் தேர்வு விலக்கு
குறைந்த கால அவகாசம் இருந்ததால் இந்த ஆண்டு நீட் தேர்விலிருந்து விலக்கு பெற முடியவில்லை. எனவே மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். மாணவர்களைக் காக்கும் அரசாக திமுக இருக்கும். வரும் ஆண்டுகளில் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுக்கப்பட்டு நீட்டில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க முயற்சிகள் முழு அளவில் மேற்கொள்ளப்படும்.
மாணவர்கள் யாரும் தவறான முயற்சியில் ஈடுபட வேண்டாம். மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக ஒன்றிய அரசு எந்த ஒப்பந்தத்தையும் இதுவரை வழங்கவில்லை.
மதுரை எய்ம்ஸ் - கட்டாந்தரையில் சேர்க்க விரும்பவில்லை
எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை ஒன்றிய அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும். கட்டாந்தரையில் மாணவர்களை சேர்க்க அரசு விரும்பவில்லை. ஆறு மாத காலத்துக்குள் குறைந்தபட்ச அத்தியாவசிய கட்டுமானப் பணிகளை முடித்து மருத்துவ மாணவர்களை சேர்க்க வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்” என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நீட் தேர்வு அச்சத்தால் சேலம் மாணவர் தற்கொலை