திருநெல்வேலி: குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரிஷிக் போலா, இவருக்கு வயது 64. இவருக்கு திருமணமாகாத நிலையில் பிரம்மச்சாரியாக வாழ்ந்து வருகிறார். ரிஷிக் போலாவுக்கு சைக்கிளில் நாடு முழுவதையும் சுற்றி பார்க்க வேண்டும் என்பது நெடுநாள் கனவாக இருந்தது. மேலும் தனது சுற்றுப்பயணத்தின் போது ஆன்மிக ஸ்தலங்களை சென்று இறைவனை வணங்க வேண்டும் என்றும் விரும்பியுள்ளார்.
ரிஷிக் போலாவின் இந்த கனவு அவரது 59 வயதில் நிறைவேறியது. அதாவது கடந்த 2017ம் ஆண்டு ரிஷிக் போலா தனது சொந்த ஊரான குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இருந்து இந்திய மாநிலங்களை சுற்றி பார்க்க சைக்கிளில் புறப்பட்டார். உத்திரபிரதேசம், மேற்கு வங்காளம், நேபாளம், கர்நாடகா, கேரளா, ஒடிசா உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக சைக்கிளிலேயே பயணம் செய்து வருகிறார்.
குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளாக, போலா வீட்டுக்கு செல்லாமல் சைக்கிளில் குடும்பம் நடத்தி வருகிறார். கால் போன போக்கில் பல்வேறு பகுதிகளுக்கு சைக்கிளில் சென்று இயற்கையையும், ஆன்மிக ஸ்தலங்களையும் ரசித்து வருகிறார். இதற்காக ரிஷிக் போலா தனது சைக்கிளில் தனக்கு தேவையான அனைத்து உடைமைகளையும் வைத்துள்ளார். கடும் மழை மற்றும் வெயில் நேரங்களில் தன்னை பாதுகாத்துக் கொள்ள குடை, தார்ப்பாய், சைக்கிள், டயர்களுக்கு காற்று நிரப்பும் ஏர் பம்ப், சைக்கிளை பழுதுபார்க்க தேவையான தொழில்நுட்ப உபகரணங்கள் என ஒரு நடமாடும் வீட்டையே சைக்கிளுக்குள் வைத்திருக்கிறார்.
ரிஷிக் போலா தொடர் பயணங்கள் மேற்கொள்வதில்லை. குறிப்பிட்ட சில நாட்கள் சைக்கிள் மிதிக்கிறார். பின்னர் சில நாட்கள் சாலை ஓரம் ஓய்வெடுக்கிறார். ஓய்வெடுப்பதற்காக போலா ஆடம்பர லாட்ஜ் போன்றவற்றை எதிர்பார்ப்பதில்லை, கிடைக்கும் இடத்தில் அந்த மாநில பகுதிகளின் இயற்கை மிகுந்த இடங்களை ரசித்தபடியே ஓய்வெடுப்பது தான் போலாவின் பழக்கமாக உள்ளது.
பல மாநிலங்களை சைக்கிளில் கடந்த ரிஷிக் போலா கடந்த மூன்று மாதங்களுக்கு முன் தமிழ்நாடு வந்தடைந்தார். தொடர்ந்து அவர் தமிழகத்தில் பல இடங்களை சுற்றிப்பார்த்தார். தொடர்ந்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ரிஷக் போலா திருநெல்வேலி வந்தடைந்தார். ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்ட போலா, தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களின் கோயில்கள் பற்றியும் அதன் தல புராணம் குறித்தும் புத்தகங்கள் மூலம் தெரித்து வைத்துள்ளார்.
அதன்படி திருநெல்வேலியில் மிகவும் சிறப்பு வாய்ந்த நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா குறித்து போலா அறிந்து வைத்துள்ளார். எனவே ஆனித்திருவிழாவை பார்க்க வேண்டுமென்ற ஆசையோடு திருநெல்வேலி வந்தார். நீண்ட தாடி, தலையில் கவிழ்த்தப்பட்ட கூடை, சைக்கிளில் குடை, உள்ளிட்ட பொருட்களுடன் டவுனில் உள்ள நெல்லையப்பர் கோயிலுக்கு வந்த அவரை அங்கிருந்தவர்கள் வரவேற்று அவரின் பயணத்தை கண்டு மகிழ்ந்தனர்.
தொடர்ந்து சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் சன்னதி உள்ளிட்ட கோவிலில் உள்ள பல்வேறு சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார் ரிஷிக் போலா. நெல்லையப்பரை தரிசனம் செய்துவிட்டு திருநெல்வேலி வழியாக தூத்துக்குடி மாவட்டம் செல்ல இருக்கிறார். அங்குள்ள திவ்ய தேச ஸ்தலங்கள் உள்ளிட்ட பழமையான கோவில்களை தரிசனம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இது போன்ற சைக்கிள் பயணம் மூலம் சுவாமி தரிசனத்தை மேற்கொள்வது மனதிற்கு மகிழ்ச்சியையும், புத்துணர்வையும் தருவதாக தெரிவித்ததோடு, தமிழகத்தில் உள்ள பழமையான கோவில்களை பார்க்கும் பொழுது ஆச்சரியம் நிறைந்து இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் தன்னுடைய சைக்கிள் பயணம் குறித்து மனம் திறந்த அவர், “என் பெயர் போலா, நான் சைக்கிளில் பயணம் செய்து வருகிறேன். நான் போகும் அனைத்து மாநிலங்கள், கோயில்களிலும் அனுபவரீதியிலான பாடங்களை கற்று வருகிறேன். நான் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் எனது பயணத்தை துவங்கினேன்.
நான் நேராக குஜராத்தில் இருந்து இங்கு வரவில்லை. குஜராத்தில் இருந்து மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டில்லி, உத்ராகாண்ட் பகுதியில் பத்ரி நாத், கேதர் நாத், யமுனோத்ரி, கங்கோத்ரி, உத்திர பிரதேசத்தில் அயோத்தி, காசி, பீகாரில் நாளந்தா, போன்ற இடங்களை சைக்கிளில் பயணித்து ரசித்து விட்டு இங்கு வந்து உள்ளேன்.
எனக்கு 64 வயது ஆகின்றது. ஆனால் நான் உடல் நலம் சரியில்லை என்று ஒரு மாத்திரை கூட சாப்பிட்டது கிடையாது. கடவுளின் அனுக்கிரகத்தால் நான் போகும் இடமெல்லாம் உங்களை போன்ற மக்கள் எனக்கு உதவுகின்றனர். நமது பாரதத்தில் ஒவ்வொரு மாநிலமும் சிறந்தது.
நமது பாரதம் ஒரு அழகிய தோட்டம் போன்றது. அதில் ஒவ்வொரு மாநிலமும் தனித்தன்மை வாய்ந்த மலர்களைப் போன்றது. நான் அந்த மலர்களில் நறுமணத்தை ரசித்துக் கொண்டு இருக்கிறேன். நான் தினந்தோறும் கடவுளை தரிசிக்கிறேன், ஆனால் கடவுள் எனக்கு பிரச்சினை என்றால் நேரில் வந்து உதவுவதில்லை. பீகார், உத்ரகாண்ட், காஷ்மீர், மத்திய பிரதேசம், குஜராத் என ஒவ்வொரு இடங்களிலும் எனக்கு தேவையான உதவிகளை உங்களைப் போன்ற மக்கள் ரூபத்தில் கடவுள் எனக்கு செய்து உள்ளார்.
நான் திருநெல்வேலிக்கு (ஜூன் 28) வந்தேன். இப்போது இங்கு திருவிழா நடந்து கொண்டு இருக்கிறது. எனது அதிர்ஷ்டம் நான் இப்பொழுது இங்கு வந்து உள்ளேன். பின்னர் நான் இங்கிருந்து அடுத்ததாக கிருஷ்ணபுரம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் என கன்னியாகுமரி செல்ல உள்ளேன்.
பின்னர் அங்கிருந்து கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா வழியாக நேபாளம் செல்ல உள்ளேன். அங்கு சென்று பசுபதிநாத் (காத்மாண்டு) முக்திநாத் தரிசிப்பதற்காக செல்கிறேன். மலை பாங்கான பகுதி, சமதள பகுதி என்றெல்லாம் நான் பார்ப்பதில்லை, நான் எனது நாட்டின் அனைத்து இடங்களையும் நான் நேசிக்கிறேன். முதலில் நான் இந்தியன் பின்னர் தான் சன்னியாசி.
அடுத்த திட்டம் என்ன என்பதை இந்த பயணம் முடிந்த பின்னர் தான் சிந்திக்க முடியும். இந்த பாரதம் மிகவும் பெரியது, இந்த உடல் ஐந்து முறை பிறப்பெடுத்தாலும் அதை முழுமையாக கண்டு அனுபவிக்க முடியாது. தமிழ்நாடு ஒரு கோயில் நகரம். திருநெல்வேலி, சிதம்பரம், திருவண்ணாமலை போல இங்கு எவ்வளவோ கோயில்கள் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் பயணிக்க வேண்டும் என்றாலும் குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆகும்.
எனது பயணத்தில் நான் பெரிதாக விபத்தினையும் சந்தித்ததில்லை. ஒருமுறை உத்ரகாண்ட் பயணத்தின் போது கரடுமுரடான சாலையில் பயணித்த போது என்னை முந்திச் சென்ற வாகனத்தால் தடுமாறி ஏற்பட்ட விபத்தில் எனது பற்கள் உடைந்தது. வேறு பெரிய விபத்து என்று எதையும் சந்தித்ததில்லை. எத்தனை கோயில்களுக்கு சென்று தரிசித்து உள்ளேன் என்று கணக்கு வைத்துக் கொண்டதில்லை, அவை எனது மனதில் நிறைவான நினைவுகளாக பதிந்து உள்ளது” எனத் தெரிவித்தார்.
ரிஷிக் போலா தனது பயணத்தை வெறும் ஆன்மிக பயணமாக மட்டுமல்லாமல் நமது நாட்டின் சிறப்புகளை அறிந்து கொள்ளும் பயணமாகவும் மாற்றியுள்ளார். மேலும் மாறி வரும் அவசர உலகத்தில் கடைக்கு செல்ல கூட சைக்கிளில் செல்ல தயங்கும் இளைஞர்களுக்கு மத்தியில் 64 வயதில் உலகம் சுற்றும் வாலிபனை போல் சைக்கிளில் நாட்டை சுற்றி வரும் ரிஷிக் போலாவின் செயல் பாராட்டுக்குரியதே.