நெல்லை மாவட்டம் அம்பை, கல்லிடைக்குறிச்சி அருகே செயல்பட்டுவந்த தனியார் கல்குவாரியில் சட்ட விதிமுறைகளை மீறி மணல் கடத்தியதாக அம்பாசமுத்திரம் பொட்டல் ராஜா நகரைச் சேர்ந்த ஜான் பீட்டர் (29), பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ஆத்தியப்பா (27), பால்ராஜ் (35), சேரன் மகாதேவி, அழகப்பபுரம் நாராயண சுவாமி கோவில் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் (25), ஆகிய நான்கு நபர்கள் மணல் திருட்டில் ஈடுபட்டுவருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனுக்குத் தகவல் கிடைத்தது.
அவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைதுசெய்து நடவடிக்கை எடுக்க கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் சகாய சாந்திக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதன்பேரில், நான்கு பேரும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைதுசெய்ய மாவட்ட ஆட்சியருக்கு காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பரிந்துரைத்தார்.
மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், நான்கு பேரையும் காவல் துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்து தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் சமர்ப்பித்தார்.
கல்லிடைக்குறிச்சி சேரன் மகாதேவி, அம்பை உள்ளிட்ட பகுதிகளில் மணல் கடத்தல் தொடர் கதையாகிவருகிறது. உரிய அனுமதியில்லாமல் ஏராளமான எம் சாண்ட் மணல் குவாரிகள் செயல்பட்டுவருகின்றன. சமீபத்தில் உரிய அனுமதியின்றி செயல்பட்டுவந்த கல்குவாரிக்கு சேரன் மகாதேவி உதவி ஆட்சியர் ஒன்பது கோடி ரூபாய் அபராதம் விதித்தார்.
இது தொடர்பான வழக்கில் இவ்வளவு தொகை அபராதம் விதிக்கும் அளவுக்கு மணல் கடத்தல் நடைபெறுவதை ஏன் முன்கூட்டியே தடுக்கவில்லை என்று உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை நெல்லை மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரிடம் கேள்வி எழுப்பியிருந்தது.
இதனால் தற்போது மணல் கடத்தல் விவகாரத்தில் மாவட்ட காவல் நிர்வாகம் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அந்த வகையில் தற்போது இந்த நான்கு பேரையும் குண்டர் சட்டத்தில் கைதுசெய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சொத்துக்காக பாட்டியை அடித்துக் கொன்ற பேரன் கைது