திருநெல்வேலி: முன்னீர்பள்ளம் அருகே 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், இதுதொடர்பாக நான்கு பேரை கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் பகுதியில் சிலர் கஞ்சா கொண்டு செல்வதாக மாவட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், காவல் துறையினர் முன்னீர் பள்ளம் பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, இருசக்கர வாகனம் ஒன்றில் இருவர் சந்தேகத்துக்கிடமான வகையில் சென்றதால், அவர்களை காவல் துறையினர் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.
தொடர்ந்து, அந்த இருசக்கர வாகனத்திற்குப் பின்னால் வந்த காரையும் காவல் துறையினர் சோதனையிட்ட போது உள்ளே 10 சிறிய மூட்டைகளில் கஞ்சாவை மறைத்து வைத்து கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, காவல் துறையினர் இருசக்கர வாகனம், காரில் வந்த தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்(21), வசவப்புரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம்கனி( 25), பாளையங்கோட்டை கேடிசி நகரைச் சேர்ந்த தினேஷ்( 22), கொக்கிரகுளம் பகுதியைச் சேர்ந்த பேராட்சி( 21) ஆகிய நான்கு இளைஞர்களை கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடமிருந்து கஞ்சா, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார், இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர், நான்கு பேரையும் காவல் துறையினர் விசாரணைக்காக முன்னீர்பள்ளம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மொத்த எடை 22 கிலோ ஆகும்.
இதன் மதிப்பு பல ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. திருநெல்வேலியில் போதைப் பொருள்கள் புழக்கத்தைத் தடுப்பதற்கு மாநகர, மாவட்ட காவல்துறை இணைந்து பல்வேறு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, கடந்த வாரம் திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து, தச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரண்டு லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட ஆறு டன் குட்கா போன்ற போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மாநகர காவல் துணை ஆணையர் சரவணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "திருநெல்வேலி போதைப் பொருள்களால் இளைஞர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க தொடர்ந்து, தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற சோதனையில் நெல்லையில் 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.