திருநெல்வேலி: தமிழ்நாட்டில் விடுபட்டு ஒன்பது மாவட்டங்களுக்கு இன்று (அக்டோபர் 6) முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.
அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் உள்ள ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களில் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், மானூர், பாளையங்கோட்டை, பாப்பாக்குடி ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
பிரத்யேக கண்காணிப்பு
முன்னதாக வாக்குப்பெட்டிகள் முகவர்கள் முன்னிலையில் பரிசோதனை செய்யப்பட்டது சீல்வைக்கப்பட்டன. மொத்தம் 621 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு 5,035 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
621 வாக்குச்சாவடி மையங்களில் 182 மையங்கள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் காவல் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. மேலும் 64 வாக்குச்சாவடி மையங்கள் வெப்கேமரா மூலம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிரத்யேக கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்படுகிறது. இது தவிர நீதின்ற உத்தரவுப்படி அனைத்து மையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
காவல் துறையினர் பாதுகாப்பைப் பொறுத்தவரை இரண்டு காவல் கூடுதல் கண்காணிப்பாளர்கள், ஏழு காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் தலைமையில் ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த 2,400 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தலில் முறைகேட்டைத் தடுக்க 10 பறக்கும் படை குழுக்கள், 74 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நான்கு சீட்டுகளில் வாக்களிக்கும் வாக்காளர்கள்
முதல்கட்டத் தேர்தலைப் பொறுத்தவரை மாவட்ட கவுன்சிலர் உள்பட ஆயிரத்து 113 பதவிகள் காலியாக இருந்த நிலையில் அதில் 211 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்வாகியிருப்பதால் மீதமுள்ள பதவிகளுக்குத் தற்போது தேர்தல் நடைபெற்றுவருகிறது.
ஒரு வாக்காளர் நான்கு பதவிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதால் நான்கு வகையான வண்ணங்களில் வாக்குச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு மஞ்சள் நிற சீட்டுகளும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு பச்சை நிற சீட்டுகளும், ஊரட்சித் தலைவர் பதவிக்கு இளஞ்சிவப்பு நிற சீட்டுகளும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வெள்ளை நிற சீட்டுகளும் வழங்கப்படுகின்றன.
வாக்காளர்கள் வாக்குச் சீட்டுகளை வாங்கி அதில் தாங்கள் வாக்களிக்க விரும்பும் வேட்பாளர்களின் சின்னத்தில் சீல்வைத்து சீட்டுகளை மடித்து பெட்டியில் போட்டுவருகின்றனர்.
கரோனா அறிகுறி உள்ள வாக்காளர்களுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு வாக்குச்சீட்டுகள் அடங்கிய பெட்டிகள் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
இதையும் படிங்க: ஊராட்சி நிதி கையாடல் விவகாரம்: தேர்தல் நடத்தும் அலுவலர் இடமாற்றம்!