திருநெல்வேலி: பணகுடி அருகே மேற்குத் தொடர்ச்சி மலையின் அமைந்துள்ள குத்தரபாஞ்சன் அருவியிலிருந்து அனுமன் நதி நீர் வரத்துக் கன்னிமார் தோப்பு மற்றும் பணகுடி பகுதி வழியாகப் பெரு மணல் கடல் முகத் துவாரத்தில் கலக்கிறது.
இதனால், அனுமன் நதி பாய்ந்து செல்லும் கன்னிமார் தோப்பு பகுதியில் எப்போதும் நீர் வரத்து காணப்படும். இதனால் பணகுடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமானோர் அங்கு குளிக்கச் செல்வது வழக்கம்.
இந்நிலையில் வழக்கம் போல இன்று பணகுடி, ஆவரைகுளம் மற்றும் குமரி மாவட்டம் சின்ன முட்டம் பகுதியைச் சேர்ந்த மோட்சம் என்பவரது மகன் நாயகம் (27) மற்றும் அவரது நண்பர்கள் மூவர் உள்பட 100 க்கும் மேற்பட்டவர்கள் கன்னிமார் தோப்பில் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென மலையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அனுமன் நதியில் வெள்ளம் கரை புரண்டோடியது. இதனால் குளித்துக் கொண்டிருந்த அத்தனை பேரையும் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது. இதில் பணகுடி பகுதியைச் சேர்ந்த பெரும்பாலானோர் பாதுகாப்பான இடத்திற்கு வந்த நிலையில் சுமார் 39 பேர் வெள்ளத்தில் தவித்தனர். இது குறித்துத் தகவலறிந்த வள்ளியூர் தீயணைப்பு வீரர்கள், பணகுடி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் .
ஆற்றின் குறுக்கே கயிறு கட்டி வெள்ளத்தில் சிக்கியவர்களை ஒவ்வொருவராக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது தண்ணீர் அதிகமாகவே அந்த முயற்சியைக் கைவிட்டனர். பின்னர் அந்த ஆற்றிலிருந்து ரோஸ் மியா புரம் வழியாக வெளியே வர வாய்ப்பு உள்ளதை அறிந்த அதிகாரிகள் மக்களைக் காட்டுப் பகுதி வழியாக வெளியே கொண்டு வந்தனர்.
வெளியே கொண்டு வந்த ஆள்கள் சரியாக உள்ளார்களா எனப் பார்க்கும்போது கன்னியாகுமரி மாவட்ட சின்னமுட்டம் நாயகன், நல்லூர் சரவணன் ஆகியோர் இல்லாததை அறிந்தனர். பின்னர் தற்போது அவர்களைத் தேடு பணியும் நடைபெற்று வருகிறது.
தற்போது அந்த பகுதியில் சேரன் மகாதேவி. சப் கலெக்டர் முகம்மது சபீர். ஆலம் , தாசில்தார் வள்ளி நாயகம், பணகுடி இன்ஸ்பெக்டர் அஜி குமார், வள்ளியூர் டிஎஸ்பி யோகேஷ் குமார் ஆகியோர் மேற்பார்வையில் காணாமல் போனதாகக் கூறப்படும் இருவரையும் தேடும் பணி நடைபெறுகிறது.
மேலும், இது குறித்துத் தகவலறிந்த தமிழ்நாட்டு சட்டப்பேரை சபாநாயகர் அப்பாவு, அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பணியை துரிதப்படுத்த அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: நைஜீரியாவில் வெள்ளத்தில் தத்தளிக்கும் 1.5 கோடி குழந்தைகள்...!