நெல்லை: தமிழ்நாட்டிலேயே பாரம்பரிய நாட்டுபடகு மூலம் மீன் பிடிக்கும் மாவட்டம் நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 மீனவ கிராமங்கள் தான். கடலில் இருந்து சுமார் 8 முதல் 10 நாட்டிக்கல் மைல் வரை இவர்கள் கடற்கரை ஓரங்களில் நாட்டு படகு மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடித்து தொழில் நடத்தி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் அடிக்கடி கூட்டப்புளி, இடிந்த கரை, கூத்தங்குழி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடற்கரை ஒட்டிய இடங்களில் மீன் பிடித்து செல்கின்றனர். இதனால், நாட்டுப் படகு மீனவர்களின் மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் சேதமடைந்து வருகின்றன.
இதனால் இவர்களுக்குள் அடிக்கடி கடலுக்குள் மோதல்களும் ஏற்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் இன்று மாலை சுமார் 3 மணி அளவில் இடிந்தகரை கடற்கரை ஓட்டிய பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இடிந்த கரையைச் சார்ந்த நாட்டுப் படகு மீனவர்களின் படகு மீது குமரி மாவட்டம் விசைப்படகு மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில் நாட்டு படகு முழுவதும் சேதம்டைந்ததால் அதிலிருந்து மீனவர்கள் கடலில் தத்தளித்துள்ளனர். அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்றொரு நாட்டுப் படகு மீனவர்கள் அவர்களை காப்பாற்றி கரை சேர்த்துள்ளனர். இதில், இடிந்தகரையைச்
சார்ந்த வினோத் மற்றும் அண்டன் ஆகியோர் காயமடைந்து நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீன்வளத்துறை அதிகாரிகளும், கூடன்குளம் கடலோர காவல் நிலைய காவலர்களும் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் நெல்லை மாவட்ட கடற்கரை ஒட்டிய பகுதிகளில் மீன்பிடிப்பதை தடை செய்ய வேண்டும் என நாட்டுப் படகு மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: மரக்காணம் மீனவர் வலையில் சிக்கிய 10 கிலோ அம்பர்கிரிஸ்!