நெல்லை: சன்னியாசி கிராமப்பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி. இவரது தாயார் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
இறந்த தாயாருக்கு பத்தாம் நாள் காரியம் செய்ய உறவினர்களுடன் தாமிரபரணி ஆற்றங்கரைக்குச் சென்றுள்ளனர். சடங்குகள் முடித்து அனைவரும் ஆற்றில் குளித்து முத்துக்குமாரசாமி உள்ளிட்டோர் கரை திரும்பினர்.
அவரது உறவினரான தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த சுவாமிநாதன்(53) அவரது மகன் சங்கர சுப்பிரமணியன்(20) ஆகிய இருவரும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக தடுமாறிய சுவாமிநாதன் ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டார். இவரை காப்பாற்ற அருகில் இருந்த அவரது மகன் சங்கர சுப்பிரமணியன், மற்றொரு உறவினர் ஆகியோர் ஆற்றில் மூழ்கினர்.
இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் ஆற்றில் குதித்துக் காப்பாற்ற முயன்றபோது, மதுரையைச் சேர்ந்த ஒருவரை மட்டும் மீட்டனர்.
இதில், சுவாமிநாதனும் மகன் சங்கர சுப்பிரமணியனும் நீரில் மூழ்கினர்.
தகவலறிந்த காவல் துறையினர் மீட்புக் குழுவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இச்சம்பவத்தில், சுவாமிநாதன் உடல் மட்டும் மீட்கப்பட்டது. மகன் சுப்பிரமணியன் உடலைத் தேடி வருகின்றனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வீட்டில் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த நபர் கைது