திருநெல்வேலி: வீடு என்பது கோவில் மாதிரி என்று கூறுவது உண்டு. அப்படி ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு என்பது மிகப் பெரிய கனவு என்றே கூறலாம். ஆண்கள் தனது வெற்றி தோல்விகளை மனைவியோடு பகிர்ந்து கொள்ளவும், குழந்தைகளோடு கொஞ்சி விளையாடவும், பெற்றோர்களிடம் பரிவு காட்டவும், 'வீடு' வாழ்க்கையின் முக்கிய தேவையாக இருந்து வருகிறது. எனவே ஒவ்வொருவரும் பார்த்து பார்த்து வீடு கட்டுவார்கள்.
இந்த நிலையில் பார்த்து பார்த்து கட்டிய தங்கள் வீட்டை தெரு நாய்களுக்காக தியாகம் செய்த தந்தை, மகனின் செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் அரசு பேருந்து நடத்துனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் கோமதி டிப்ளமோ முடித்து விட்டு ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா பேரலையின் போது போடப்பட்ட ஊரடங்கால் தெரு நாய்கள் உணவின்றி தவித்தன ஏற்கனவே நாய்கள் மீது அதிக பிரியம் கொண்ட கோமதி, கொரோனா ஊரடங்கின் போது தெரு நாய்களுக்கு ஓடிச் சென்று உதவியுள்ளார். தினந்தோறும் நாய்களுக்கு உணவளித்தும் வந்துள்ளார். அப்போது தெரு நாய்கள் மீது கோமதிக்கு ஒரு வித ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் தெரு நாய்கள் அடிப்பட்டு ஆதரவில்லாமல் தவிப்பதைக் கண்டு மனமுடைந்துள்ளார்.
எனவே சாலைகளில் அடிபட்டு ஆதரவில்லாமல் தவிக்கும் நாய்களுக்கு தனது வீட்டில் அடைக்கலம் கொடுக்க கோமதி முடிவெடுத்துள்ளார். தனது முடிவை வீட்டில் சொல்ல அவரது தந்தை முருகனும் அதற்கு ஆதரவு கொடுத்துள்ளார். இதையடுத்து தந்தை, மகன் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக தங்கள் வீட்டிலேயே தெரு நாய்களுக்கு அடைக்கலம் கொடுத்து வருகின்றனர். வீதியில் அடிபட்டு மற்றும் நோய்வாய்ப்பட்டு கிடக்கும் தெருநாய்களை கோமதி மீட்டு ராமையன்பட்டியில் உள்ள அரசு கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, பின்னர் அந்த நாய்களை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பராமரிக்கிறார்.
பின்னர் நாய் பூரண குணமடைந்த பிறகு அந்த நாயை அதே இடத்தில் கொண்டு விடுவார். நாளடைவில் கோமதியின் செயலை அறிந்த பலர் தெருவில் அடிபட்டு கிடக்கும் நாய்கள் குறித்து அவருக்கு தகவல் கொடுத்துள்ளனர். யார் தகவல் கொடுத்தாலும் மாட்டேன் என்று சொல்லாமல் உடனடியாக கோமதி தெரு நாய்களை மீட்டு தனது வீட்டிற்கு அழைத்து வரத் தொடங்கினார். அதன் காரணமாக இப்போது கோமதியின் வீடு முழுவதும் நாய்கள் நிறைந்து காணப்படுகிறது.
தற்போது அவர் 30 முதல் 40 நாய்களை தனது வீட்டில் வைத்து பராமரித்து வருகிறார். குறிப்பாக இரண்டு மாடிகள் கொண்ட கோமதியின் வீட்டில் எங்கு பார்த்தாலும் நாய்களாக காட்சியளிக்கிறது. நாய்களுக்கு உணவு வைப்பது, அவை இயற்கை உபாதைகள் கழிப்பது, குளிப்பது என அனைத்தும் வீட்டுக்குள் வைத்து நடைபெறுகிறது.
நாய்கள் மட்டுமில்லாமல் ரோட்டில் அடிபட்டு கிடக்கும் காக்கா, பூனை போன்ற உயிரினங்களுக்கும் கோமதி தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்துள்ளார். வீட்டில் முருகன், கோமதி படுக்க வேண்டிய கட்டில் மெத்தையில் நாய்களும் பூனைகளும் உரிமையோடு படுத்துள்ளன.
ஓய்வு காலத்தில் நேரத்தை போக்கிக் கொண்டிருந்த கோமதியின் தந்தை முருகனும் தனது மகனின் செயலை விரும்பி அவரும் உடனிருந்து நாய்களை பராமரிக்க தொடங்கியுள்ளார். பொதுவாக நாய் வளர்ப்பில் ஆர்வம் காட்டும் நபர்கள் ஆசைக்காக ஒன்று அல்லது இரண்டு நாய்களை வளர்த்து பராமரிப்பார்கள்.
ஆனால் கோமதியும் அவரது தந்தையும் வீதியில் ஆதரவு இல்லாமல் தவிக்கும் தெருநாய்களை காப்பாற்ற தங்கள் வீட்டையே நாய்களின் இல்லமாக மாற்றிய சம்பவம் அருகில் இருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இருப்பினும் அக்கம் பக்கத்தில் சிலர் கோமதியின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் அந்த எதிர்ப்பையும் தாண்டி கோமதி தொடர்ந்து தெருவில் அடிபட்டு கிடக்கும் நாய்களை தனது வீட்டில் வைத்து பராமரித்து வருகிறார்.
மேலும் நாய்களுக்கு தினமும் மறக்காமல் மூன்று வேளை உணவும் வழங்குகிறார். இதற்காக கோமதியும் அவரது தந்தையும் நாள்தோறும் சுமார் 1500 முதல் 2000 ரூபாய் வரை செலவு செய்கிறார்கள். இதுவரை இருவரும் சேர்ந்து சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமான பணத்தை தெரு நாய்களுக்காக செலவு செய்ததாக தெரிவித்து உள்ளனர். நாய்களுக்கு தேவையான உணவை தங்கள் வீட்டிலேயே சமைத்து கொடுக்கின்றனர். நாய்களுக்கு மிகவும் பிடித்த சிக்கன், மட்டன் போன்ற உணவையும் வாங்கி கொடுக்கின்றனர்.
நாளுக்கு நாள் நாய்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் அவற்றை பராமரிப்பதற்கு தேவையான பணம் இல்லாமல் தற்போது கோமதி மனமுடைந்துள்ளார். முடிந்தவரை அவரது தந்தையின் ஓய்வூதியத்தில் இருந்து செலவு செய்து வருகிறார். இது தவிர அவரது நண்பர்களும் பண உதவி அளித்து வருகின்றனர்.
இதற்கிடையில் அக்கம் பக்கத்தில் இருப்பவர் எதிர்ப்பால் கோமதி வீட்டில் வைத்து நாய்களை பராமரிப்பதை தவிர்த்து ஊருக்கு வெளியே இதற்காக தனி செட் ஒன்றை அமைக்க முடிவு செய்துள்ளனர். அதற்கு அதிக பணம் தேவைப்பட்டதால் தங்கள் வீட்டில் ஒரு பகுதியை விற்றுவிட்டு, அந்த பணத்தை வைத்து தற்போது ஊருக்கு வெளியே சுமார் 50 சென்ட் இடத்தில் செட் அமைத்து வருகின்றனர்.
மேலும் விரைவில் இந்த பணிகள் முடிந்த பிறகு நாய்கள் அனைத்தையும் அந்த செட்டிற்கு அழைத்துச் செல்ல இருக்கின்றனர். கடைசி வரை தெரு நாய்களை பராமரிப்பதே தனது லட்சியம் என்று கோமதி கூறுகிறார். மது, புகையிலை, கஞ்சா போன்றவற்றிற்கு அடிமையாகி கடனாகி சொத்தை விற்கும் பல இளைஞர்களுக்கு மத்தியில், கோமதி தெருவில் ஆதரவற்று கிடக்கும் நாய்களுக்காக கடனாகி தனது வீட்டை விற்ற சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே பெரும் பாராட்டை பெற்றுள்ளது.
இந்நிலையில் கோமதி நம்மிடம் கூறும் போது, "நான் டிப்ளமோ முடித்துவிட்டு ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறேன். கொரோனா காலத்தில் தெருவில் தவித்த நாய்களுக்கு சாப்பாடு வழங்கினேன். அப்போது அடிபட்டு கிடக்கும் நாய்களை மீட்டு உதவ வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது.
தற்போது எனது வீட்டில் 40 நாய்களை வைத்து பராமரித்து வருகிறேன். வீட்டில் வைத்து நாய்களை வளர்க்க சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே நாய்களுக்காவ செட் அமைக்க வீட்டை விற்று இடம் வாங்கினோம். நாய்கள் மீது அனைவரும் அன்பு காட்ட வேண்டும். இதுபோன்று அரசு சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆதரவற்ற நாய்கள் பராமரிப்பு மையம் ஏற்படுத்த வேண்டும். எனது ஆசை வீட்டில் நாய்களை வளர்ப்பதால் எனக்கு ஒன்றும் கஷ்டமாக இல்லை" என்று தெரிவித்தார்.
கோமதி நண்பர் சுமன் கூறும் போது, "நாங்கள் இருவரும் பள்ளியில் ஒன்றாக படித்தோம். நாய்களை பராமரிப்பதற்காக கோமதி செட் அமைத்து வருகிறார். அவருக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன். அவருக்கு திருமணம் ஆகவில்லை நாய்களை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் அவருக்கு உள்ளது. வீட்டில் நாய்கள் இருப்பதால் யாரும் பெண் கொடுப்பதில்லை" என்று தெரிவித்தார்.
ஆதரவற்ற மனிதர்களை சில நிமிடம் வீட்டில் தங்க வைக்கவே அஞ்சும் தற்போதைய நவீன சமூகத்துக்கு மத்தியில் தெருவில் அடிபட்டும், நோய் வாய்ப்பட்டும் கிடக்கும் நாய்களுக்காக தங்கள் வீட்டையே தானம் செய்த கோமதி மற்றும் அவரது தந்தையின் செயல் பாராட்டுக்குரியதே என்பது குறிப்பிடத்தக்கது.